உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வழக்கம் போல் பிரேசில் வீரர் நெய்மரின் ஹேர் கட் கவனம் பெற்றுள்ளது.
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக கடந்த 3 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத நெய்மர், ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார்.
பிரேசில் தனது முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியுடன் நேற்று மோதியது. இந்தப் போட்டி, ஒன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
போட்டியில் நெய்மர் ஜொலிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் நெய்மரின் ஹேர் கட் குறித்த பேச்சு ஹாட்டாக இருந்தது. பலரும் அவரது ஹேட் ஸ்டைலை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டார்கள்.
நெய்மரையும், ஹேர் கட்டையும் பிரிக்கவே முடியாது. அந்த அளவிற்கு விதவிதமான ஹேர் ஸ்டைலில் நெய்மர் களமிறங்குவார். ஜெய்ஹிந்த் படத்தில் செந்தில் வெட்டியிருக்கும் முள் போன்ற ஹேர் கட்டும் நெய்மர் செய்திருக்கிறார். இணையத்தில் தேடினால், நெய்மர் ஏராளமான ஹேர் ஸ்டைல் படங்கள் கிடைக்கும். சில ஹேர் ஸ்டைலை பார்த்தாலே குபீரென சிரிப்பு வந்துவிடும். இந்த முறையும் தலையின் இரு புறத்திலும் மொட்டை அடிப்பது போல் வெட்டி முன் பகுதியில் மட்டும் முடி விட்டிருப்பதைப் போல் நெய்மர் ஹேர் கட் செய்துள்ளார்.