விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்ரிக்கா - டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் இடம்

பாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்ரிக்கா - டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் இடம்

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் டெஸ் தரவரிசையில் தென்னாப்ரிக்கா 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பாகிஸ்தானை தென்னாப்ரிக்கா வீழ்த்தியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்கா முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கன் 90 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து விளையாடி பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 2ஆம் இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்து தென்னாப்ரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தத் தொடர் வெற்றியால் தென்னாப்ரிக்கா அணியின் டெஸ்ட் ரேட்டிங் சட்டென உயர்ந்து 110 புள்ளிகளை பெற்றது. இதனால் அந்த அணி 2ஆம் இடத்திற்கு முன்னேறியது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 116 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 108 புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.