விளையாட்டு

வெற்றி முகத்திற்கு திரும்புமா இந்தியா?: தென்னாப்ரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை

webteam

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலா மைதானத்தில் நடைபெறுகிறது‌. பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவே ஆகும். சமீபத்திய நியூசிலாந்து சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருபது ஓவர் தொடரில் வரலாற்று வெற்றி பெற்றிருந்த போதிலும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொ‌டர்களில் இந்திய அணி முழுமையாக தோல்வி அடைந்தது.

அனுபவ வீரர்கள் சிலர் இல்லாதது பின்னடைவுக்கு காரணமாக பார்க்கப்பட்டாலும், அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோரின் மோசமான ஆட்டத்திறன் வெளிப்பாடு தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்த சூழலில், தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு ஷிகர் தவன், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார் ஆகிய நட்சத்திர வீரர்கள் திரும்பியுள்ளனர்.

தென்னாப்ரிக்க அணியை பொருத்தவரையில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‌ஃபார்முக்கு திரும்பியுள்ளது. அந்த அணியின் கேப்டன் டி காக், கிளாசன், மாலன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அசத்தலான ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் லுங்கி ‌இங்கிடி, பெலுக்குவாயோ ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும், கடந்தாண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது அடைந்த படுதோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தென்னாப்ரிக்க அணியும் இத்தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன