விளையாட்டு

மார்க்ரம் போராட்டம் வீண்: ஒரு விக்கெட்டுக்கு காத்திருக்கிறது ஆஸி!

webteam

தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களும் எடுத்தன. தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் 71 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ரன்கள் எடுக்கத் திணறினர். 189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்ட் 53 ரன்களும் கேப்டன் 38 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.
 நேற்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. மேலும் மூன்று ஓவர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 417 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த இலக்கை நோக்கி களம் புகுந்த தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான வேகப்பந்து வீச்சுக்கு நிலைகுலைந்தது. தொடக்க வீரர் மார்க்ரம் அபாரமாக ஆடி தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 143 ரன் எடுத்து அவுட் ஆனதும் தென்னாப்பிரிக்காவின் கனவு தகர்ந்தது. அடுத்த வந்தவர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். டி காக் 81 ரன்களுடனும் மோர்கல் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 89 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்துள்ளது.  

அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 124 ரன்கள் தேவையாக உள்ள நிலையில், அந்த அணியின் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. இதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. 

ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.