மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இலங்கை அணியிடம் இழந்த தென்னாப்பிரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந் நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி கண்டியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
(ஹென்ரிக்ஸ்)
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது. 3-வது வரிசையில் இறங்கிய தென்னாப்பிரிக்க அறிமுக வீரர் ரீஜா ஹென்ரிக்ஸ் 88 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் விளாசியவர் என்ற சாதனையை ஹென்ரிக்ஸ் வசப்படுத்தினார். அவர் ஹென்ரிக்ஸ் 102 ரன்களில் ஆட்டம் இழந்தார். டுமினி 92 ரன்களும் ஹாசிம் அம்லா 59 ரன்களும், டேவிட் மில்லர் 51 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் திசாரா பெரேரா பத்து ஓவர்களில் 75 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டையும் லஹிரு குமரா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் இறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 84 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் நிகிடி 4 விக்கெட்டுகளும், பெலக்வாயோ 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி, தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நான்காவது ஒரு நாள் போட்டி 8-ம் தேதி நடக்கிறது.