விளையாட்டு

டி20யில் குறைவான நேரத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா மோசமான பதிவு.!

டி20யில் குறைவான நேரத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா மோசமான பதிவு.!

webteam

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 விக்கெட்டுகளை குறைவான நேரத்தில் விட்டுக்கொடுத்து மோசமான ரெக்கார்டை பதிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று புதன்கிழமை திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தனர் இந்திய பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமாவின் விக்கெட்டை முதல் ஓவரின் கடைசி பந்தில் இன்ஸ்விங் பந்தை வீசி போல்டாக்கி பெவிலியன் திருப்பினார் தீபக் சாஹர். பின்னர் இரண்டாவது ஓவரை வீசிய இளம்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் இரண்டாவது பந்தில் தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிகாக்கை போல்டாக்கி கேப்டன் பவுமாவை தொடர்ந்து டிகாக்கையும் பெவிலியன் திருப்பினார்.

முதல் இரண்டு ஓவரில் 1-2 என இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாப்பிரிக்க அணி. அதன் பிறகு பார்ட்னர்சிப் போட்டு மீண்டுவரும் என்ற நிலையில் இரண்டாவது ஓவரின் கடைசி இரண்டு பந்தில் ரோஸ்ஸோ மற்றும் டேவிட் மில்லர் இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை நிலைகுலைய செய்தார் வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங். 2 ஓவர் முடிவில் 8-4 என்று மோசமான நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. பின்னர் மூன்றாவது ஓவரை வீசிய தீபக் சாஹர் மூன்றாவது பந்தில் அதிரடி வீரர் ட்ரிஸ்டன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 9ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. அந்த 5 விக்கெட்டுகளில் 4 பேட்டர்கள் 0 ரன்களுடன் வெளியேறி இருந்தனர்.

இந்நிலையில் ஒரு அணி சர்வதேச கிரிக்கெட்டில் டி20 போட்டிகளில் முதல் 5 விக்கெட்டுகளை குறைவான நேரத்தில் விட்டுகொடுத்து மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

விக்கெட்டுக்கள் எடுத்தது குறித்து பேசியிருக்கும் அர்ஸ்தீப் சிங், டேவிட் மில்லர் விக்கெட்டை எடுத்தது ஒரு பவுலராக மகிழ்ச்சியை கொடுத்தது. மில்லர் அவுட்ஸ்விங் எதிர்பார்த்த நிலையில் நான் இன்ஸ்விங் டெலிவரி போட்டு விக்கெட்டை வீழ்த்தியது கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.