விளையாட்டு

தென்னாப்ரிக்கா பந்துவீச்சை பதம் பார்த்த பங்களாதேஷ் - 330 ரன்கள் குவிப்பு

தென்னாப்ரிக்கா பந்துவீச்சை பதம் பார்த்த பங்களாதேஷ் - 330 ரன்கள் குவிப்பு

rajakannan

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷகிப் அல் ஹாசன், முஸ்பிகூரின் சிறப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 330 ரன்கள் குவித்துள்ளது.

தென்னாப்ரிக்கா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. தென்னாப்ரிக்கா அணியில் நெகிடி, ரபாடா, இம்ரான் தாஹிர் என பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால், பங்களாதேஷ் அணியை எளிதில் கட்டுப்படுத்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பங்களாதேஷ் வீரர்கள் மிரள வைத்துவிட்டார்கள். நேர்த்தியான பேட்டிங்கை எல்லா வீரர்களும் வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், சவும்யா சர்கார் களம் இறங்கினர். இதில் இக்பால் நிதானமாக விளையாட, சர்கார் அதிரடியாக ரன்களை சேர்த்தார். நெகிடி, ரபாடாவால் இவர்களது விக்கெட்டை எடுக்க முடியவில்லை. 

பின்னர், பெலுக்வயோ பந்து வீசினார். அவரது  பந்து வீச்சில் இக்பால் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சர்கார் 30 பந்தில் 42 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். பங்களாதேஷ் அணி 11.4 ஓவரில் 75 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதனால், அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஷகிப் அல் ஹாசன், முஸ்பிகூர் ரஹிம் ஜோடி சிறப்பாக விளையாடி அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்களது விக்கெட்டை தென்னாப்ரிக்கா வீரர்களால் வீழ்த்தவே முடியவில்லை. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தால், பங்களாதேஷ் அணி 31.6 ஓவர்களில் 200 ரன்களை கடந்தனர். தொடர்ச்சியாக 6 ரன் என்ற ரன் ரேட்டை தக்க வைத்தனர். அதனால், நிச்சயம் அந்த அணி 300 ரன்களை கடக்கும் என்பது உறுதியானது.

இந்த ஜோடியை இம்ரான் தாஹிர் பிரித்தார். அவரது பந்துவீச்சில் ஷகிப் அல் ஹாசன் 75 ரன்னில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மிதுன் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து தாஹிர் பந்துவீச்சிலே போல்ட் ஆனார். முஸ்பிகூர் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் 80 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் மஹ்முத்துல்லா 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மொசடேக் ஹொசை 20 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது.