விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி; அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி; அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

JustinDurai
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்றது. எனினும், ரன் ரேட் அடிப்படையில் தொடரில் இருந்து தென்ஆப்ரிக்கா வெளியேறியது.
துபாயில் நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பையின் முக்கியமான போட்டியில் நேற்றிரவு தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணியில் ராஸி வான் டெர் டுசென் அதிரடி காட்டினார். 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகளை விளாசி 60 பந்துகளில் அவர் 94 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். 25 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த மார்க்ரமும் அவுட் ஆகாமல் இருக்க, 20 ஓவர்களில் தென்ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
190 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் 15 ரன்கள் எடுத்த ஜேசன் ராய் காயமடைந்து பெவிலியன் திரும்பினார். ஜாஸ் பட்லர் 26 ரன்களிலும் மொயின் அலி 37 ரன்களிலும் அவுட் ஆகினர். டேவிட் மலானும் 33 ரன்கள், லிவிங்ஸ்டன் 28 ரன்களில் அவுட்டாகி வெளியேற இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டன. தொடர்ந்து 3 பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார் ரபாடா. இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்தால் 179 ரன்களே எடுக்க முடிந்தது. 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.
எனினும், 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தினால், அதிக ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற சூழலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா, அதை எட்ட முடியாததால் இந்த போட்டியில் வென்றும் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. இதையடுத்து, ஏ பிரிவில் அரையிறுதிக்கு இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றன.