விளையாட்டு

“உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு குறைவு?”- கங்குலி

webteam

உலகக் கோப்பைக்கான அணியில் அவர் எவ்வாறு பொருந்துவார் என்பது பெரிய கேள்வி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

சர்வேதச கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய திருவிழா ஒருநாள் உலகக் கோப்பை தொடர். இந்தத் தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு தயாராக வேண்டி பல்வேறு கிரிக்கெட் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியும் அதற்கு ஆயுத்தமாகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. உலகக் கோப்பையை மனதில் கொண்டே இந்தத் தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், “ரிஷப் பந்த் வரும்காலங்களில் மிகவும் முக்கியமான வீரராக இருப்பார். ஆனால் இந்தாண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கான அணியில் அவர் எவ்வாறு பொருந்துவார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

மேலும் என்னைப் பொருத்தவரை உலகக் கோப்பைக்கான இந்திய அணி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. அதில்  பந்துவீச்சாளர்களாக சமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருப்பார்கள். அத்துடன் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய தொடரில் இல்லாததால் அவருக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். எனினும் தேர்வுக்குழுவின் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாது” எனக் கூறியுள்ளார்.