ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் ஏன் முதல் பந்தை எதிர்கொள்ளமாட்டார் என்ற காரணத்தை பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த தொடக்க ஜோடி எதுவென்றால் அது சச்சின் - கங்குலி ஜோடிதான். 1996 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்த ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி இருக்கிறார்கள். இருவரும் இணைந்து 136 இன்னிங்ஸ்களில் 6,609 ரன்களை குவித்துள்ளனர். இந்த ஜோடியின் சராசரி 49.32 ஆகும். இந்த ஜோடியின் சாதனைகளை இப்போதுள்ள தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடியால் கூட இன்னும் எட்ட முடியவில்லை.
கங்குலி - சச்சின் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய காலக்கட்டத்தில் எப்போதும் முதல் பந்தினை கங்குலிதான் எதிர்கொள்வார். பெரும்பாலும் அப்போது ஒரு பேச்சு அடிபடும், சச்சினுக்கு இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொள்ள தடுமாறுவார். அதனால் வலுக்கட்டாயமாக கங்குலியை முதல் பந்தை எதிர்கொள்ள நிர்பந்திக்கிறார் என்பதுதான் அது. இப்போது அதே கேள்வியை இந்திய அணி வீரர் மயாங்க் அகர்வால் பிசிசிஐ நடத்திய நேரலை நிகழ்ச்சியில் கங்குலியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த சவுரவ் கங்குலி, " ஆமாம் எப்போதும் அவர் என்னை முதல் பந்தை எதிர்கொள்ள செய்வார். சில நேரங்களில் நான் அவரிடம் இந்த முறை நீங்கள் முதல் முறை பந்தை சந்தியுங்கள் என கூறுவேன். ஆனால் அதற்கும் அவர் நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும் என்பார். அதற்கு அவர் இரண்டு பதில்களை வைத்திருந்தார்.
ஒன்று, அவருடைய பாஃர்ம் நன்றாக இருந்தால் அவர் முதல் பந்தை எதிர்கொள்ளக் கூடாது என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு. இரண்டாவது, அவரக்கு பாஃர்ம் சரிவர இல்லையென்றாலும் முதல் பந்தை எதிர்கொள்ளமாட்டார், ஏனென்றால் அது தனக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பார். இதைதான் சொன்னேன் அவருக்கு இரண்டு பதில்கள் எப்போதும் உண்டு" என்றார்.
மேலும் தொடர்ந்த கங்குலி " சில நேரங்களில் சச்சினை நான் வலுக்கட்டாயமாக முதல் பந்தை எதிர்கொள்ள வைத்ததும் உண்டு. பெவிலியனில் இருந்து ஆடுகளத்துக்கு செல்லும்போது நான் அவரைதாண்டி வேகமாக சென்று பிட்சின் மறுமுனையில் நின்றுவிடுவேன். தொலைக்காட்சியில் நேரலை செல்வதால் அவரும் முதல் பந்தை சந்திப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டுவிடும். இதுபோன்று இரு முறை மட்டுமே நடந்திருக்கிறது" என்றார் அவர்.