விளையாட்டு

“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி

“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி

webteam

வீரர்கள் தேர்வில் கோலி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படுவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “என்னைப் பொறுத்தவரை விராட் கோலி இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிதாக வீரர்களை அணியில் எடுக்கும் போது அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் அந்த வீரர்களுக்கு சிறப்பாக செயல்பட முடியும். 

இந்தத் தொடரில் ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அவ்வாறு வாய்ப்பு அளிக்கப்பட்ட போது அவர் நன்றாக விளையாடினார். அதேபோல மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும். விராட் கோலி இதனை விரைவில் புரிந்து கொண்டு நடப்பார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் தேர்வு செய்யப்படாதது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் கடைசியாக குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த சிட்னி மைதானத்தில் 5 விக்கெட்களை எடுத்திருந்தார். 

எனினும் தற்போது அணியில் இடம் கிடைக்காமல் வெளியே அமர்ந்திருக்கிறார். இம்முறை அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் நன்றாக விளையாடி வருகிறார். ஆகவே இந்திய அணியில் வீரர்களின் இடத்திற்கு அதிக போட்டி நிலவுவது நல்ல விஷயம்தான். ஆனால் இந்தப் போட்டியில் ஜடேஜா எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.