விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை Ind Vs Aus: அரையிறுதியில் கவனிக்க வேண்டிய 5 வீராங்கனைகள்!

மகளிர் டி20 உலகக் கோப்பை Ind Vs Aus: அரையிறுதியில் கவனிக்க வேண்டிய 5 வீராங்கனைகள்!

JustinDurai

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்று அரங்கேற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான அரையிறுதியில் கவனிக்க வேண்டிய முக்கியமான 5 வீராங்கனைகள் யார் யார் என்று இங்கு காணலாம்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடமும், தென்ஆப்பிரிக்கா 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து முதலிடமும், இந்தியா 2-வது இடமும் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின. 

இந்த நிலையில் கேப்டவுனில் இன்று மாலை (வியாழக்கிழமை) அரங்கேறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. எல்லா உலகக் கோப்பை போட்டியிலும் அரை இறுதிக்கு முன்னேறிய ஒரே அணியாக ஆஸ்திரேலியா உள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளை வென்றது. இங்கிலாந்திடம் தோற்றதால் தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி 5-வது முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்த நிலையில், இன்று அரங்கேற உள்ள அரையிறுதியில்  கவனிக்க வேண்டிய முக்கியமான 5 வீராங்கனைகள் யார் யார் என்று இங்கு காணலாம்.

ஸ்மிருதி மந்தனா: 

இந்திய அணியின் துணை கேப்டனும், நட்சத்திர தொடக்க வீரருமான ஸ்மிருதி மந்தனா இந்த தொடரில் சிறப்பான ஃபார்மில் உள்ளார். கைவிரல் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய ஸ்மிருதி மந்தனா, கடந்த இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்திருக்கிறார். முக்கியத்துவம் இன்றைய போட்டியிலும், வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிச்சா கோஷ்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அங்கம்வகித்த இளம் வீராங்கனை ரிச்சா கோஷ் தனது துடிப்பான ஆட்டத்தால் மகளிர் டி20 உலகக் கோப்பையிலும் இடம்பிடித்து அசத்தி வருகிறார். விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ்  முதல் 3 போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றிக்கு உதவியிருந்தார். இன்றைய போட்டியிலும்  ரிச்சா கோஷ் ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ரேணுகா தாக்கூர்: 

கடந்த வாரம் நடைபெற்ற இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரேணுகா தாக்கூர் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். ஆண்டின் சிறந்த வளரும் வீராங்கனையாக ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டவர் ரேணுகா தாக்கூர். இன்றைய போட்டியிலும் தனது அபாரமான வேகப்பந்து பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அலிசா ஹீலி

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரும் நட்சத்திர தொடக்க வீராங்கனையுமான அலிசா ஹீலி, நடப்பு தொடரில் சிறப்பான நிலையில் உள்ளார். இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் 146 ரன்கள் குவித்துள்ளார். கடந்த காலங்களில் தனது பேட்டிங்கால் இந்திய அணியை துவம்சம் செய்தவர். மீண்டுமொருமுறை ருத்ரதாண்டவம் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தஹிலா மெக்ராத்: 

உலகின் நம்பர் 1 டி20 பேட்டிங் வீராங்கனை. எடுத்த எடுப்பிலேயே அதிரடியான ஆட்டத்தை கையிலெடுக்கக் கூடியவர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி போட்டியில் அவர் 57 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறார்.