விளையாட்டு

“சோர்ந்துவிடுவீர்கள் என்றால் ஐபிஎல்-ஐ தவிருங்கள்” - இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை

webteam

ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது முக்கியமல்ல, இந்தியாவிற்காக விளையாடுவதே முக்கியம் என இந்திய வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடும்போது, சர்வதேச போட்டிகளை விட அதிகம் சோர்வடைவதாக கடந்த வருடமே ஆய்வறிக்கைகள் தெரிவித்திருந்தன. குறுகிய காலத்தில் அதிக போட்டிகளில் விளையாடுவது மிகுந்த சோர்வை கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளால் காயங்களும் ஏற்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், “ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் இந்தியாவிற்காக விளையாடவில்லை. எனவே நீங்கள் சோர்ந்துவிடுவீர்கள் என்றால் அதனை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் இந்தியாவிற்கு விளையாடும்போது வேறுவிதமாக உணர்வீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள், அதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாதீர்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.