chess pt web
விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்.. தொடரை நடத்த அனுமதி கேட்ட தமிழ்நாடு... ஆனால் எங்கு நடக்கப்போகிறது தெரியுமா?

PT WEB

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரை நடத்த விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டபோது, சிங்கப்பூர் செஸ் சங்கமும், சிங்கப்பூர் அரசும் போட்டி நடத்துவதற்காக விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்தியாவைப் பொருத்தவரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, மத்திய விளையாட்டுத்துறையுடன் இணைந்து டெல்லியில் நடத்துவதற்காகவும், சென்னையில் நடத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தனியாக விண்ணப்பம் செய்திருந்தார்கள். மூன்று இடங்களுக்கும் சென்று செஸ் தொடர் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், சிங்கப்பூரில் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் என்பது, எந்த செஸ் கூட்டமைப்பு நடத்துவதற்கான விருப்பம் தெரிவிக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்தியாவில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தொடரை நடத்த விருப்பம் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு வாரியமும் செஸ் ஒலிம்பியாட்டை நடத்திய அனுபவத்தைக் கொண்டு சென்னையில் நடத்த அனுமதி கேட்டிருந்தது. இத்தகைய சூழலில்தான் சிங்கப்பூரில் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது.