சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு அவர் மீதான எதிர்பார்ப்பே காரணம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான நேற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 205 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து இந்தியா பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறினார். இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 21 வயதான சுப்மன் கில் இந்த டெஸ்ட் தொடரில் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
அதாவது இதுரை 7 இன்னிங்ஸில் முறையே 29,50,0,14,11,15,0 என எடுத்துள்ளார். இது குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் "அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் மோசமான காலக்கட்டம் இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் சுப்மன் கில் அற்புதமாக விளையாடினார். அதனால் அவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதன் காரணமாகவே இப்போது அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை என நினைக்கிறேன். அவர் இப்போது மீண்டும் புதிதாக விளையாடுவது போல் விளையாட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் "கில் தன்னுடைய பேட்டிங்கை சிறிது சரிப்படுத்தினால் போதும், அவர் எதிர்கொள்ளும் பந்துகளை நேராக விளையாட வேண்டும். அவர் அப்படி விளையாட காரணத்தால் அவுட்டாகி விடுகிறார் என நினைக்கிறேன். ஆனால் நேற்றைய நாளில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசினார்கள். மிகவும் பிரமாதமாக இருந்தது " என்றார் சுனில் கவாஸ்கர்.