விளையாட்டு

சூர்ய குமாரையே பின்னுக்கு தள்ளிய ஸ்ரேயாஸ்; புதிய ரெக்கார்டுகள் படைத்த பண்ட், புஜாரா!

சூர்ய குமாரையே பின்னுக்கு தள்ளிய ஸ்ரேயாஸ்; புதிய ரெக்கார்டுகள் படைத்த பண்ட், புஜாரா!

Rishan Vengai

சூரியகுமாரை பின்னுக்கு தள்ளிய ஸ்ரேயாஸ் ஐயர்! 2022ன் அதிக ரன்கள் குவித்த வீரரானார்!

இந்தியாவின் தற்போதைய இன்ஃபார்ம் பேட்டரான சூரியகுமார யாதவை பின்னுக்கு தள்ளி, இந்திய அணிக்காக இந்த வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரரானார் ஸ்ரேயாஸ் ஐயர்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே இன்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையை படைத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கும் போது, 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி, பின்னர் சட்டீஸ்வர் புஜாராவோடு கைக்கோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியை முதல் நாள் முடிவில் 278 ரன்களுக்கு எடுத்துச்சென்றார். ஸ்ரேயாஸ் ஐயர் முதல் நாள் முடிவில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

2022ஆம் ஆண்டின் அதிக ரன்கள் குவித்த வீரர்!

இந்நிலையில், இந்த வருடத்தில், அனைத்து வடிவங்களையும் சேர்த்து இந்தியாவுக்காக 1489 ரன்கள் எடுத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணிக்காக 1424 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ்-ஐ பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை படைத்துள்ளார் ஸ்ரேயாஸ். கிட்டத்தட்ட சூர்யகுமார் இந்த ஆண்டு இந்தியாவுக்கான போட்டிகளில் விளையாடி முடித்திருப்பதால், ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ரன் குவித்த இந்திய பேட்டராக இந்த ஆண்டை முடிக்கும் இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கும் முனைப்பில் ஸ்ரேயாஸ்!

மொத்தமாக 38 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் 1489 ரன்கள் எடுத்துள்ளார். அனைத்து வடிவங்களிலும், 47.96 சராசரியுடன் பேட்டிங் செய்துள்ள அவர், இந்த ஆண்டில் 13 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறாப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்ரேயாஸ்.

நடந்துவரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 4விக்கெட்டுகளை இழந்த நிலையில் கைக்கோர்த்த புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஜோடி, 5ஆவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. ஐயர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் விளையாடினார் மற்றும் இடையில் சில சிறப்பான ஹிட்டிங் மூலம் தனது கிளாசைக் காட்டினார். அவரது அபாரமான பேட்டிங்கால் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில், இந்திய அணியில் நிரந்தரமான இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.

4000 ஆயிரம் ரன்களை கடந்த ரிஷப் பண்ட்!

இந்தியாவின் அதிரடி வீரரான ரிஷப் பண்ட் அனைத்து சர்வதேச போட்டிகளையும் சேர்த்து 4000 ஆயிரம் ரன்களை சேர்த்துள்ளார். இன்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 46 ரன்களை குவித்த நிலையில், அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து ரிஷப் பண்ட், 66 டி20 போட்டிகளில் 22.43 சராசரியுடன் 987 ரன்களும், 30 ஒருநாள் போட்டிகளில் 34.60 சராசரியுடன் 865 ரன்களும், 32 டெஸ்ட் போட்டிகளில் 2152 ரன்களும் 43க்கு மேல் சராசரியுடன் எடுத்துள்ளார்.

இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 8ஆவது வீரராக மாறினார் புஜாரா!

இந்தியாவிற்காக அதிக ரன் குவித்த 8ஆவது வீரர் என்ற பெருமையை, திலீப் வெங்சர்க்கரை பின்னுக்கு தள்ளி புஜாரா இந்த சாதனையை படைத்துள்ளார்.

2010ல் அறிமுகமான புஜாரா, தற்போது 97 டெஸ்டில் 6882 ரன்களை குவித்துள்ளார். மூத்த பேட்டரான புஜாரா 44.11 சராசரியில் தனது ரன்களை எடுத்துள்ளார். மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 18 சதங்கள் மற்றும் 34 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் (15921 ரன்கள்) சச்சின் டெண்டுல்கர், (13265 ரன்கள்) ராகுல் டிராவிட், (10122 ரன்கள்) சுனில் கவாஸ்கர், (8781 ரன்கள்) வி.வி.எஸ்.லக்ஷ்மன், (8503 ரன்கள்) வீரேந்திர சேவாக், (8075 ரன்கள்) விராட் கோலி, (7212 ரன்கள்) சவுரவ் கங்குலி, (6882 ரன்கள்) சேதேஷ்வர் புஜாரா, (6868 ரன்கள்) திலீப் வெங்சர்க்கார் முதலிய வீரர்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.