இந்திய வீரர்கள் மட்டுமே இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யோசனை
தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்தாண்டு மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளை திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் ஏப்ரல் 15-ஆம் தேதி போட்டியை தொடங்கினாலும் வெளிநாட்டு வீரர்கள் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம்
காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்து டி20 உலகக் கோப்பை போட்டியும் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த
கிரிக்கெட் உலகமும் போட்டிகளை நடத்துவதில் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய யோசனையை தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்த
அணியின் தலைமை செயல் அதிகாரி ரஞ்சிஜ் பர்தாகுர் "இப்போது நிலவும் இக்கட்டான சூழலில் இந்தியா்கள் மட்டும் பங்கேற்கக் கூடிய வகையிலான
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆதரவளிக்கிறது. அவ்வாறு நடந்தால் அது நிஜமாகவே "இந்தியன் ப்ரீமியர்
லீக்" தொடராக இருக்கும்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் " இதற்கு முன், இந்த வகையிலான ஐபிஎல் போட்டியை நாம் நினைத்துக் கூட இருந்திருக்க மாட்டோம். ஆனால் இப்போது
அத்தகைய முடிவுக்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. போட்டியே நடத்தாமல் போகக் கூடிய சூழலுடன் ஒப்பிடுகையில், இந்தியா்கள் மட்டும்
விளையாடும் வகையில் போட்டியை நடத்துவது நல்லது. இதுதொடா்பான முடிவை பிசிசிஐ முடிவு எடுக்க வேண்டும். அதுவும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படலாம். ஐபிஎல் அணிகளின் நலனை கருத்தில் கொண்டு பிசிசிஐ நல்லதொரு முடிவெடுக்கும் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார் ரஞ்சித் ரஞ்சிஜ் பர்தாகுர்.