விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: கடைக்காரரின் மகன் தேர்வு  

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: கடைக்காரரின் மகன் தேர்வு  

JustinDurai
முனைப்புடன் செயல்பட்டு, சித்தார்த் யாதவை கிரிக்கெட் வீரராக உருவாக்கிய அவரது தந்தைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வாகியிருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் யாதவ் என்கிற வீரரின் பின்னணி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், அவர் ஒரு சிறிய கிராமத்தில் சாதாரண கடை நடத்தும் கடைக்காரரின் மகன்.
சித்தார்த் யாதவின் தந்தையான ஷ்ரவன் யாதவ், காஜியாபாத் அருகே உள்ள கோட்கான் எனும் கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக்கடை நடத்தி வருகிறார். எட்டு வயதிலேயே சித்தார்த் யாதவுக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருப்பதையும், அருமையாக விளையாடுவதையும் கண்டு மகனை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்க முடிவு செய்தார் அவர்.
இதற்காக தினமும் மதியம், ஷ்ரவன் தனது மகன் சித்தார்த் யாதவை அருகிலுள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று, அவருக்கு பந்து வீசுவார் அல்லது மகனை பந்துவீசச் செய்து பேட்டிங் பிடிப்பார். தினமும் 3 மணி நேரம் இவ்வாறு பயிற்சி கொடுத்து வந்திருக்கிறார். இதற்காக மதியம் 2 மணிக்கு கடையை அடைத்துவிட்டு மாலை 6 மணி வரை மைதானத்திலேயே இருப்பார். அதன்பிறகே ஷ்ரவன் மீண்டும் கடையை திறப்பார்.
சித்தார்த் யாதவை விளையாட்டில் ஈடுபடுத்துவதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால் பின்வாங்காத ஷ்ரவன், மகனை எப்படியாவது கிரிக்கெட் வீரராக உருவாக்கி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.
மாவட்ட அளவில், பள்ளி அளவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அருமையாக விளையாடி அடுத்தடுத்த கட்டங்களுக்கு வேகமாக முன்னேறினார் சித்தார்த். இதன் பலனாக, உத்தரப்பிரதேசத்தின் 16 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வானார். ஒரு இரட்டை சதம் மற்றும் ஐந்து சதங்களுடன் தொடர் ஒன்றில் அதிக ஸ்கோர் குவித்ததற்காக மண்டல கிரிக்கெட் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சித்தார்த் யாதவ் தேர்வாகியிருக்கிறார். முனைப்புடன் செயல்பட்டு சித்தார்த் யாதவை கிரிக்கெட் வீரராக உருவாக்கிய அவரது தந்தைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.