விளையாட்டு

"என் சுயசரிதை திரைப்படத்தில் இவர்தான் நடிக்க வேண்டும்" இது அக்தரின் ஆசை !

"என் சுயசரிதை திரைப்படத்தில் இவர்தான் நடிக்க வேண்டும்" இது அக்தரின் ஆசை !

jagadeesh

தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இந்த பாலிவுட் நடிகர்தான் நடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் அதிகவேகப் பந்துவீச்சாளர்கள் யார் என்றப் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரட் லீக்கும், ஷோயப் அக்தருக்கும் இடையே இருந்து வந்தது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் அதிவேகமாக பந்துவீசி அக்தரே அந்தப் பெருமையை தக்க வைத்திருந்தார். சர்வதேச அளவில் பாகிஸ்கானுக்காக 224 போட்டிகளில் பங்கேற்ற அக்தர் 444 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய அதிவேகப் பந்துவீச்சை பதிவு செய்தார் அக்தர். இந்தச் சாதனை இதுவரை உலகளவில் எந்தவொரு வேகப்பந்து வீச்சாளராலும் முறியடிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றுவிட்டாலும் வர்ணனையாளர் மற்றும் கிரிக்கெட் விமர்சகராக தொடர்ந்து வருகிறார் அக்தர்.

மேலும் பாகிஸ்தானில் தனக்கென்று பிரத்யேகமாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் பேசியும் வருகிறார் அக்தர். பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு இருப்பதால் அங்கும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பேசி வருகிறார் அக்தர். இந்நிலையில் "ஹெலோ ஆப்" மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது கேள்வியொன்று அவரிடம் முன்வைக்கப்பட்டது, அது "உங்களுடைய சுயசரிதை படத்தில் உங்கள் கதாப்பாத்திரத்தில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்" என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்தர், "என் கதாப்பாத்திரத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கானே நடிக்க வேண்டும். அதுதான் என் விருப்பம். மேலும் இது அமையுமானால் அது என் கனவுத் திட்டம்" என்று கூறியுள்ளார்.