விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட்.. அடுத்தடுத்து அதிரடி - இது தவானின் வரலாறு..!

முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட்.. அடுத்தடுத்து அதிரடி - இது தவானின் வரலாறு..!

webteam

நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் தோல்வியை தழுவியது சென்னை. அபார சதம் அடித்து டெல்லியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றவர் ஓப்பனர் பேட்ஸ்பேன் தவான். பல கேட்சுகளை விட்டு அவரை சதத்தை நோக்கி அழைத்துச் சென்றனர் சென்னை வீரர்கள். தனக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சதம் அடித்தார். தோல்விக்கு பின்னர் பேசிய தோனி,

ஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவரின் சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே, அவரது விக்கெட் மிகவும் முக்கியமானது. எனத் தெரிவித்தார். ஐபிஎல் மட்டுமல்ல இந்திய அணியில் விளையாடும்போது தவான் பல போட்டிகளை முழுவதுமாக தாங்கியுள்ளார். நிலைத்துவிட்டால் நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு அணிக்கு பக்கபலமாக இருப்பார் தவான்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2004ம் ஆண்டு விளையாடினார் தவான். 3 சதமடித்து 505 ரன்களை எடுத்ததால் கவனிக்கப்பட்டார். ஆனாலும் அவர் இந்திய அணிக்குள் எளிதாக நுழைந்துவிட முடியவில்லை.

பல உள்ளூர் ஆட்டங்களை தன்னுடைய பிரத்யேக ஷாட்கள் மூலம் மெருகேற்றிக்கொண்டிருந்த தவானுக்கு இந்திய அணிக்குள் செல்ல 2010ம் ஆண்டு வாசல் திறந்தது. தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கி டக் அவுட் ஆகி வெளியேறினார் தவான். தொடக்கமே சரிக்கியது. ஆனால் துவண்டுவிடவில்லை அவர், 136 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5688 ரன்களை எடுத்து இந்திய அணியின் முக்கிய வீரராக அறியப்பட்டார். 17 சதங்கள், 29 ஐம்பது என அசரவைத்தார் தவான். டெஸ்ட், டி20 என தான் களம் காணும் அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்தார். 34 டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்கள், 7 சதங்கள் 5 ஐம்பதுகள் அடித்துள்ளார்.

60 டி20 போட்டிகளில் விளையாடி 1588 ரன்களை எடுத்துள்ளார் தவான். ஆனால் டி20 போட்டிகளில் சதம் ஏதும் எடுக்கவில்லை. பின்னர் ஐபிஎல் போட்டிகளில் டெல்லிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியிலேயே 52 ரன்களை எடுத்தார். அதன் பின்னர் மும்பை, ஹைதராபாத் என அணி மாறிய தவான் மீண்டும் டெல்லிவசம் சென்றார்.

நடப்பு ஐபிஎல்க்காக தவானை 5.20 கோடிக்கு எடுத்துள்ளது டெல்லி. நடப்பு ஐபிஎல்லில் 9 போட்டிகளில் 359 ரன்கள் எடுத்துள்ளார் தவான். நேற்று அடித்த சதம் குறித்து பேசிய தவான், 13 வருடங்களாக ஐபிஎல் ஆடுகிறேன். என்னுடைய முதல் சதம் இது. ரொம்பவும் ஸ்பெஷல்தான் எனவும் தெரிவித்துள்ளார்