விளையாட்டு

‘ஷாஹீன் அஃப்ரிடி அத பண்ணியிருக்கனும்’ - சோயிப் அக்தரின் கருத்தை சாடிய ஷாகித் அஃப்ரிடி

‘ஷாஹீன் அஃப்ரிடி அத பண்ணியிருக்கனும்’ - சோயிப் அக்தரின் கருத்தை சாடிய ஷாகித் அஃப்ரிடி

சங்கீதா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி சில ஓவர்கள் இருந்தபோது, காயத்தால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி வெளியேறிய நிலையில், அப்போது அவர் வலி நிவாரணிகளை பயன்படுத்திக்கொண்டு, மீதி ஓவர்களை பந்து வீசி இருக்கலாம் என்று முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ள கருத்தை ஷாகித் அஃப்ரிடி கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த 13-ம் தேதி ஆஸ்ரேலியாவில் நடடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது. இந்தத் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு (15 ஓவரில் 97/4), கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டபோது பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹீன் அஃப்ரிடி 16-வது ஓவரின் முதல் பந்தை இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு வீசினார். ஆனால் அந்தப் போட்டியில் சில ஓவர்களுக்கு முன்பாக கேட்ச் பிடித்தபோது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அதிக வலியை உணர்ந்ததால், மீதி ஓவர்களை தொடர முடியாமல் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், அந்த ஓவரின் மீதம் உள்ள 5 பந்துகளை வீச இஃப்திகார் அகமதுவை அழைத்தார்.

அதுவரை 35 பந்துகளில் 28 ரன்களே எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ், அதன்பிறகு தனது அதிரடியை காட்டி மொத்தம் 49 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதையடுத்து, ஷாஹீன் அஃப்ரிடி மீதம் இருந்த 2 ஓவர்களை வீசியிருந்தால், இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் பலரும் கூறியநிலையில், சிலர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் பேண்டேஜ்களுடன் விளையாடியதையும் மற்றும் கேன்சருடன் யுவராஜ் சிங் விளையாடியதையும் நினைவுக்கூர்ந்து ஷாகீன் அஃப்ரிடியை விமர்சித்தனர்.

இந்நிலையில், அதேபோல் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர், முக்கியமான அந்த இரண்டு ஓவர்களை ஷாஹீன் அஃப்ரிடி தவறவிட்டதில் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பதால், அவர் எல்லாவற்றையும் பணயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் வெளியேறியதற்கு பதிலாக ஷாஹீன் அஃப்ரிடி வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டிருக்கலாம் என்றும், கால்களே உடைந்தாலும் தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு வலி நிவாரணி எடுக்கும்போது கால்கள் மரத்துப்போய் வலி ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள சோயப் அக்தர், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், கடினமான முடிவுதான் என்றாலும், ரிஸ்க் எடுக்கலாமா வேண்டாமா என்று கேப்டன் யோசித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சோயப் அக்தரின் இந்தக் கருத்தைத்தான், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கடுமையாக விமர்சித்துள்ளார். சோயப் அக்தர் கூறுவதுப்போன்று வலி நிவாரணிகளை எல்லாம் எடுக்கக் கூடாது என்றும், அது மிகவும் தவறு எனவும் தெரிவித்துள்ளார். நானும் போட்டியின்போது வலி நிவாரணிகளை எடுத்துள்ளேன், அப்போது வலி குறைந்த மாதிரி இருந்தாலும், அதன்பிறகு மிகுந்த வலியை ஏற்படுத்துவதுடன், நிறைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.