விளையாட்டு

மின்னல் வேக யார்க்கர் வீசி ஆப்கான் வீரரை ஹாஸ்பிடலுக்கு அனுப்பிய ”ஷாஹின் அப்ரிடி”

மின்னல் வேக யார்க்கர் வீசி ஆப்கான் வீரரை ஹாஸ்பிடலுக்கு அனுப்பிய ”ஷாஹின் அப்ரிடி”

webteam

ஆப்கானிஸ்தான் அணியின் ஓபனிங் பிளேயர் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷாஹின் அப்ரிடி வீசிய பந்தில் விக்கெட்டை இழந்து கடைசியில் ஒரு மாற்று வீரரின் உதவியால் மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாய் இருந்தது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அப்ரிடியின் வருகைதான். முழங்கால் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஓய்வில் வைக்கப்பட்டார். பும்ராவை போன்றே அவரும் இந்த உலககோப்பையை விட்டுவிடுவாரோ என்ற கவலை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகமாய் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பங்குபெற்று ஆடினார். அந்த போட்டியில் அப்ரிடி இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார், மேலும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இருப்பினும் இன்று தொடங்கிய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில், ஷாஹீன் பங்குபெற்று ஆடினார். இந்த போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் ஒபனர் ரஹமனுல்லா குர்பாஸ் விக்கெட்டை வீழ்த்தி சிறந்த தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஷாஹின் அப்ரிடி வீசிய அதிவேகமான ஏர்க்கர் பந்து குர்பாஸ் கால்களை தாக்கி லெக்பை விக்கெட்டை பறித்தது. அப்போது ஷாஹின் வீசிய பந்தின் வேகத்தால் குர்பாஸ் இடது காலின் கால்விரல் நசுங்கியது. அவரால் வலியால் நடக்கவே முடியாமல் போனது. பின்னர் நடுவர் உத்தரவின் பேரில் குர்பாஸை பரிசோதிக்க பிசியோக்கள் வந்ததால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அவரால் தொடர்ந்து நடக்க முடியாமல் போனதால் கடைசியில் அவர் ஒரு மாற்று பீல்டரால் மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்காக குர்பாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், கேப்டன் முகமது நபி ஆட்டமிழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி 51 ரன்கள் எடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

ஷாஹீன் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பிறகு, ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களில் தத்தளித்தது. பின்னர் கைக்கோர்த்த நபி மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் கூட்டணி 7ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.

155 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 2.2 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழையின் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி முடிவில்லாமல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மேட்ச் முடிந்த பிறகு ஷாஹீன் அப்ரிடி குர்பாஸ்ஸை சந்தித்து காயம் குறித்து விசாரித்தார்.