விளையாட்டு

`யாரென்று தெரிகிறதா... தீயென்று புரிகிறதா!’- இளம்புயல் ஷபாலி வர்மாவின் அசாத்திய சாதனைகள்!

`யாரென்று தெரிகிறதா... தீயென்று புரிகிறதா!’- இளம்புயல் ஷபாலி வர்மாவின் அசாத்திய சாதனைகள்!

Rishan Vengai

இந்தியாவிற்காக யு-19 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் ஷபாலி வர்மா, கடந்த முறை சீனியர் அணிக்காக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி எப்படி வலிமிகுந்ததாக இருந்தது என்பதை தெரிவித்துள்ளார்.

மகளிருக்கான யு-19 டி20 உலகக்கோப்பை தொடர், இந்த ஆண்டுதான் முதன்முதலாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடரானது, ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 29ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒருமாத காலமாக நடைபெற்றது. இந்திய அணியில் 15 வயதில் அறிமுகமான ஷபாலி வெர்மா, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இத்தொடரை வழிநடத்தினார்.

தொடக்கம் முதலே டேபிள் டாப்பராக ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணி, அரையிறுதிப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் பர்ஷவி சோப்ராவின் அற்புதமான பந்துவீச்சால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா, முதலில் பந்துவீசியது. சிறந்த பார்மில் இருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் க்ரேஷ் ஸ்கிரிவென்ஸ் விக்கெட்டை விரைவாக வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்து அணியை முதல் 5 ஓவரிலேயே நிலைகுலையச் செய்தது. பின்னர் சுழற்பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் கலக்கிய இந்திய அணி 17.1 ஓவர் முடிவில் 68 ரன்களுக்கு இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சுருட்டியது. பின்னர் எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்து யு-19 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

பெண்களுக்கான கிரிக்கெட்டில் தன்னுடைய நாட்டை முதல்முறையாக உலகக்கோப்பைக்கு அழைத்து சென்றதற்கு பிறகு கண்ணீர் சிந்திய கேப்டன் ஷபாலி வெர்மா பேசுகையில், “நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த போது, வலிமிகுதியால் கண்ணீர் வந்தது. ஆனால் தற்போது ஆனந்தத்தில் கண்ணீர் வருகிறது, நான் இதை கட்டுப்படுத்த நினைத்தாலும் என்னால் முடியவில்லை. நாங்கள் இங்கு எதற்கு வந்தோமோ, அதை செய்துமுடித்துவிட்டோம். இதை நான் பெரிய சாதனையாகவே பார்க்கிறேன், இதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். இந்த கோப்பையில் திருப்தி அடையப் போவதில்லை, இது வெறும் ஆரம்பம் தான்” என்று பேசினார்.

மேலும், “இப்போது என்ன கையில் இருக்கிறதோ அதற்காக முழு முயற்சியையும் போடுபவள் நான். மெல்போர்ன் உலகக்கோப்பையில் தோல்வியடைந்ததிற்கு பிறகு, என்னுடைய முழு இலக்கு யு-19 உலகக்கோப்பையை வெல்வது மட்டுமாக தான் இருந்தது. நான் அணி வீரர்கள் அனைவரிடமும் ஒன்றை மட்டும் தான் சொன்னேன். அது, `நாம் இங்கு உலகக்கோப்பைக்காக வந்திருக்கிறோம், உலகக்கோப்பைக்காக மட்டும் தான் வந்திருக்கிறோம்’ என்பது. இப்போது அதை நாங்கள் வென்று விட்டோம். இந்த வெற்றியை நான் மறக்க முயற்சிப்பேன். இப்போது என்னிடமுள்ள இதே நம்பிக்கையை இந்திய சீனியர் அணியிலும் எடுத்துச்சென்று, இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வெல்ல முயற்சிப்பேன்” என்று கூறினார்.



தொடர்ந்து அணி வீரர்கள் குறித்து பேசிய அவர், “என்னால் வார்த்தைகளால் கூறமுடியாது, அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியை கூறிக்கொள்கிறேன். அவர்கள் ஒருவரை ஒருவர் ஆதரித்து செயல்படும் விதம் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது, நான் இந்த பேட்சை நிச்சயம் மிஸ் செய்ய போகிறேன்” என்று கூறினார்.

ஷபாலி வெர்மா கடந்து வந்த பாதை:

2004ஆம் ஆண்டு பிறந்த ஷபாலி வெர்மா, தன்னுடைய 15 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார், சச்சின், தோனி போலவே அவருடைய முதல் போட்டியும் 0 ரன்னுடன் டக்அவுட்டாகவே தொடர்ந்தது, ஆனால் அதற்கு பிறகு அவர் இந்தியாவிற்காக செய்து காட்டியதெல்லாம், காலத்திற்க்கும் நினைவில் நிற்கும் ஒன்றாக இருந்தது. இதோ... அவரின் சில சாதனைகள்

குறைந்த வயதில் உலகின் நம்பர் 1 வீரராக மாறிய ஷபாலி வெர்மா!

டி20யின் அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறிய ஷபாலி தான், அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த ஒருவருடத்தில், அதாவது தன்னுடைய 16 வயதில் ஐசிசியின் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக உருவெடுத்தார். இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் இவ்வளவு குறைந்த வயதில் உலகின் நம்பர் 1 வீரராக மாறிய வீரர் ஷபாலிக்கு முன்னர் யாரும் இல்லை.

உலகின் நம்பர் 1 டி20 வீரர் என்ற அந்த இமாலய இலக்கை ஷபாலி வெறும் 18 போட்டிகளில் செய்திருந்தார். குறைவான போட்டிகளில் விளையாடி நம்பர் 1 இடத்தை பிடித்த ஒரே இந்திய வீரரும் ஷபாலி வர்மா தான். அவர் நம்பர் 1 டி20 வீரராக மாறும் போது 18 போட்டிகளில் 146 ஸ்டிரைக் ரேட்டுடன், 485 ரன்களை குவித்திருந்தார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் அடித்த முதல் வீரர்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் டெஸ்ட்டில் தனது முதல்போட்டியில் விளையாடுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டார் ஷபாலி வெர்மா. தன்னுடைய முதல் போட்டியை இங்கிலாந்து மண்ணில் விளையாடிய ஷபாலி, முதல் இன்னிங்ஸில் 96 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதமடித்த அவர், 63 ரன்களை குவிக்க, அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 159 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் மற்றும் 3ஆவது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்தார்.

குறைந்த வயதில் 1000 ரன்களை கடந்த முதல் சர்வதேச வீரர்!

டி20 போட்டிகளில் 51 இன்னிங்ஸ்களில் 5 அரைசதங்களுடன் 1,231 ரன்களை குவித்திருக்கும் ஷபாலி, குறைந்த வயதில் 1000 சர்வதேச டி20 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கடந்த ஆண்டு 2022ல் படைத்தார். அவர் இந்த சாதனையை வெறும் 18 வயதில் படைத்தார்.

30 வருட சச்சின் சாதனையை முறியடித்த ஷபாலி!

இளம் வயது வீரராக சச்சின் தன்னுடைய முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்திருந்தார். 16 வயதில் அவர் படைத்திருந்த அந்த சாதனையை, 30 வருடங்கள் கழித்து தன்னுடைய 15 வயதில் சர்வதேச அரைசதம் அடித்து முறியடித்தார் ஷபாலி. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசிய ஷபாலி, 49 பந்துகளில் 70 ரன்களை அடித்து இந்த சாதனையை படைத்தார்.

25 வயதுடைய ஆண் பவுலர்களை பந்துவீச சொல்லி பயிற்சி மேற்கொண்ட ஷபாலி!

கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, ஷபாலி அங்கிருக்கும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எழுப்பப்பட்ட வேகமான ஷார்ட் பந்துகள் மற்றும் பவுன்சர்களை விளையாடுவதில் சிரமப்பட்டார்.

இதனால் ஷார்ட் பந்துகளில் சிறப்பாக விளையாட முடிவெடுத்த ஷபாலி, 25 வயதுடைய ஆண் பவுலர்கள் பந்துவீச, ஒருநாளைக்கு 200-250 ஷார்ட் பந்துகளை பயிற்சியாக எதிர்கொண்டார். அவர்களது பந்துவீச்சு 125-130 கிமீ வேகத்தில் வீசப்பட்டது.

நான் கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்க காரணமே சச்சின் தான் - ஷபாலி!

சச்சினை ரோல்மாடலாக வைத்து விளையாடி வருபவர் தான் ஷபாலி வெர்மா. இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு சச்சினை சந்தித்த ஷபாலி வெர்மா, `என் ஹீரோவை சந்திக்கும் எனது கனவு நிறைவேறிவிட்டது’ என டிவிட்டரில் அப்போது தெரிவித்திருந்தார்.

சச்சினை சந்தித்த பிறகு டிவிட்டர் பதிவை பதிவிட்ட அவர், “நான் கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்க காரணம் சச்சின் சார் தான். எனது குடும்பம் அவருக்கு கோவில் மட்டும் தான் வைத்து வழிபடவில்லை, மற்றபடி அப்படிதான் வணங்கி வருகின்றனர். இன்று எனக்கு சிறப்பான நாள், நான் எனது ரோல்மாடலை பார்த்துவிட்டேன். இது எனது கனவு மெய்யான தருணம்” என்று தெரிவித்திருந்தார்.

நம்மை போலவே இந்த சாதாரண ரசிகைதான் இந்தியாவுக்கே பெருமை கொண்டுவரப்போகிறார் என அன்று சச்சினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

இந்தியாவின் மகளாகியிருக்கும் ஷபாலிக்கு, தற்போது பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாராட்டு மழையில் ஷபாலி மற்றும் இந்திய மகளிர் அணி நனைந்து வரும் இதே வேளையில், அப்பாராட்டை அவர் பெற்ற நாளின் சில மறக்க முடியா தருணங்கள், இங்கே: