இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது டி-20 போட்டி வெலிங்கடனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 28 பந்தில் 41 ரன்னும் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் 42 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 155 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தி அணியில் அதிகப்பட்சமாக, மலன் 39 ரன்களும் ஜோர்டான் 36 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சட்னர் 3 விக்கெட்டுகளையும் சோதி, பெர்குசான், டிம் சவுதி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.