விளையாட்டு

சாம்சன், ப்ரித்வி போன்றோர் பெஞ்சில் காத்திருக்க புதுவீரருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பா?

சாம்சன், ப்ரித்வி போன்றோர் பெஞ்சில் காத்திருக்க புதுவீரருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பா?

Rishan Vengai

எதிர்வரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சமுக வலைதளங்களில் அதற்கு கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது.

இலங்கை அணி ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாட உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜன்வரி 15ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்நிலையில், கிரிக்பஸ் வெளியிட்டிருக்கும் ஒரு தகவலில் டி20க்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக, மற்றொரு இளம் இந்திய வீரர் சேர்க்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி வெளியானதில் இருந்தே சமுகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சேத்தன் சர்மா தலைமையிலான கடைசி தேர்வுக்குழு ஆலோசனை!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்து வெளியேறிய பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை கலைத்தது பிசிசிஐ. இந்நிலையில், சேத்தன் தலைமையிலான தேர்வுக்குழுவின் அதிகாரம் இன்னும் ஒருவார காலம் இருப்பதால், கடைசியாக இலங்கைக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பு சேத்தன் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய தேர்வாளர்களை ரஞ்சி டிராபி பணிகளுக்கு அனுப்பியதால் சேத்தன் சர்மாவின் தேர்வுக் குழுவின் ஆயுட்காலம் இன்னும் சில நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் நீடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த முடிவின் வெளிப்படையான உட்குறிப்பு என்னவென்றால், வெளியேறும் குழு ஜனவரி 3ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இலங்கைக்கு எதிரான வெள்ளை பந்து தொடருக்கான அணியை தேர்வு செய்யும். குழுவின் கூட்டம் செவ்வாய்கிழமையே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு!

விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாலும், ரோகித் சர்மாவிற்கு கைவிரலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என்பதாலும், மூத்த வீரர்களான அவர்கள் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது. ரவீந்திர ஜடேஜாவும் டி20 போட்டிக்கு திரும்பும் நிலையில் இல்லாமல் இருப்பதால், அவரும் ஒருநாள் போட்டிக்கு இந்திய அணிக்குள் திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

19 வயதுக்குட்பட்ட இளம்வீரருக்கு டி20 அணியில் வாய்ப்பு!

இந்நிலையில், மூத்த வீரர்கள் ஓய்வில் இருப்பதால், இந்திய டி20 அணியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ”யாஸ் துள்”விற்கு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாஸ் துள் 19வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் மட்டுமல்லாமல், சயது முஸ்தாக் அலி டிரோபியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

சஞ்சு சேம்சன், பிரித்வி சா இருக்கும் போது எதற்க்கு என கடும் விமர்சனம்!

இந்நிலையில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், பிரித்வி ஷா, ருதுராஜ், சுப்மன் கில் என பல வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்குழுவின் இந்த செயல்பாடு மோசமானதாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் எந்த அடிப்படையில் அணிக்குள் எடுக்கிறீர்கள், எந்த இடத்தில் ஆட வைப்பீர்கள் என்ற கேள்வியையும் அதிகமாக எழுப்பி வருகின்றனர்.