ஆர்யன், அனயா இன்ஸ்டா பக்கம்
விளையாட்டு

"இது அத்தனை எளிதாக இல்லை"-பெண்ணாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்.. இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், தான் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை எடுத்துக்கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்துள்ளார்.

Prakash J

இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமாக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவருடைய மகன், ஆர்யன். இவர், தற்போது பெண்ணாக மாறியுள்ளார். தவிர, தனது பெயரையும் அனயா என மாற்றிக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்மூலமே இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த அந்தப் பதிவில், "கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் விடியற்காலை களத்துக்குச் சென்று பலரது சந்தேகங்கள் மற்றும் முன் முடிவுகளுக்கு மத்தியில் எனது வலிமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தேன்.

ஆனால், இந்த ஆட்டத்தைத் தாண்டி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. என்னை நானே சுயமாக கண்டறிய வேண்டிய பாதையில் நிறைய சவால்களை சந்தித்தேன். எனது சுயத்தை அடைவதற்குச் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. இது அத்தனை எளிதாக இல்லை. இன்று இந்த விளையாட்டில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் வந்த பாதை எளிதானது அல்ல. ஆனால், எனது சுயத்தை நான் கண்டறிந்தது தான் மிகப்பெரிய வெற்றி” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்கா|தேர்தல் தோல்வியால் 170கோடி கடன்; ஜனநாயக கட்சியினருக்கு உதவி செய்யுங்கள் என ட்ரம்ப் கிண்டல்

முன்னதாக, அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில்தான், ஆர்யன் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து அவர் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை மேற்கொண்டு தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொண்டவர்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி இல்லை என கூறி இருந்தது. அதனால் தற்போது அனயாவாக மாறியுள்ள ஆர்யனுக்கும் இனி கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வங்கதேசம்| ட்ரம்ப் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய யூனுஸ் அரசாங்கம்! பின்னணி என்ன?