விளையாட்டு

“தோனி அணிக்காகவே விளையாடி வருகிறார்”- துணைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்

“தோனி அணிக்காகவே விளையாடி வருகிறார்”- துணைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்

webteam

தோனியின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.  கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் பவுண்டரிகள் அடிக்காமல் சிங்கிள் அடிப்பதில் ஆர்வம் காட்டினர். இறுதியில் இந்த ஜோடி 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது. இவர்கள் இருவரும் 20 சிங்கிள் ரன்கள் அடித்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றம் அளித்தது. 

இதனையடுத்து தோனியின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுத் தொடங்கியன. இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஒரே ஒரு போட்டி தவிர மற்றப் போட்டிகளில் தோனி சிறப்பாக செயல்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து நன்றாக விளையாடினார். அதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடினார்.

இதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சவாலான ஆடுகளத்தில் அரைசதம் கடந்து அணிக்கு முக்கிய பங்கை ஆற்றினார். அதேபோல இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி சிறப்பாகதான் விளையாடினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் நன்றாக பந்துவீசினர். இறுதி கட்டத்தில் அவர்கள் வீசிய பந்துகள் அடிப்பதற்கு சற்று சவாலாக இருந்தது. இந்திய அணி கடைசி ஓவர்களில் அதிக ரன்கள் அடிக்க வேண்டியிருந்ததே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். 

மேலும் தோனி அணிக்காகவே விளையாடி வருகிறார். சமீபத்தில் அடிக்கடி அவர் மீது ஏன் இதுபோன்ற விமர்சனங்கள் எழுகின்றன என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.