விளையாட்டு

“எல்லோருக்கும் அதிர்ச்சிதான்; ஓய்வு முடிவுக்கு இதான் காரணம்”-சானியா மிர்சாவின் கூல் பதில்

“எல்லோருக்கும் அதிர்ச்சிதான்; ஓய்வு முடிவுக்கு இதான் காரணம்”-சானியா மிர்சாவின் கூல் பதில்

சங்கீதா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்ததற்கு, என்ன காரணம் என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதிலளித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக டென்னிஸ் களத்தில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ள 35 வயதான சானியா மிர்சா, இதுவரை 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். சமீபத்தில் இவர் ஓய்வுப் பெறுவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்துடன் ஆஸ்திரேலிய ஓபன் 2022 கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் தோற்றப்பின்னர், ஏற்கனவே அறிவித்தபடி சானியா மிர்சா இந்தப் போட்டியுடன் ஓய்வு பெற்றதாகக் கூறப்பட்டது. எனினும், இந்த ஆண்டு முழுவதும் டென்னிஸ் போட்டியில் விளையாடுவேன் என்று சானியா மிர்சா பின்னர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், இந்த சீசனுடன் ஓய்வுப் பெறுவதாக அறிவித்ததற்கு என்ன காரணம் என்று சானியா மிர்சா பதிலளித்துள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பலமுறை கிராண்ட் ஸ்லாம் வென்றவருமான சானியா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில், "எனது ஓய்வு முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது என்று நினைக்கிறேன். இந்த சீசனின் முடிவில் ஓய்வு பெறுவது பற்றி நான் நூறு சதவீதம் நேர்மையாக அறிவித்தேன். எனினும் இவ்வளவு சீக்கிரம் நான் ஓய்வு முடிவை அறிவித்திருக்கக் கூடாது என்று அனைவரும் நினைத்தனர்.

மற்றவர்களுக்கு எப்படி தோன்றியதோ அப்படித்தான் எனக்கும் தோன்றியது. இந்த ஆண்டு முழுவதும் விளையாடி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் ஓய்வு முடிவை அறிவித்ததும், அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். எனது வாழ்க்கையில் டென்னிஸ் எப்போதும் மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. எனது டென்னிஸ் நினைவுகள் மற்றும் சாதனைகளுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இப்போதுதான் வருடம் துவங்கியிருந்தாலும், நூறுசதவிகிதம் இந்த ஆண்டின் இறுதிவரை விளையாட திட்டமிட்டுள்ளேன்.

ஓய்வு குறித்து சிறிது காலமாகவே நான் யோசித்துக்கொண்டிருந்ததால், செய்தியாளர்கள் சந்திப்பில் ஓய்வு குறித்து சொன்னதும் செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், 'எனக்கு இப்போது 35 வயது. அதனால் கண்டிப்பாக அவர்கள் இதை ஒரு கட்டத்தில் எதிர்பார்த்திருக்க வேண்டும்' என்று நினைத்தேன். ஆஸ்திரேலியா எப்போதும் எனக்கு சிறப்பான ஒன்று. இங்குதான் நான் மிக சிறப்பான சாதனைகளையும் செய்துள்ளேன். தற்போது எனது உடல் மீண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

எனக்கு இரண்டு முழங்கால்கள் மற்றும் மணிக்கட்டில் மூன்று பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்ததால், எனது விளையாட்டிற்கு ஏற்றாற்போல் எனது உடல்நிலை தற்போது இல்லை. மேலும், எனக்கு குழந்தை பிறந்ததால், எனது உடல் முன்புபோல் இல்லை. ஒருவேளை இது மனது சார்ந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும்போது, அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைய விஷயங்களை மாற்ற வேண்டியிருக்கும். இருப்பினும் இந்த விஷயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, குழந்தை பெற்றபிறகும் என கனவுகளை என்னால் அடைய முடிகிறது. எனது போட்டிகளின் வெற்றி, தோல்விகளை எனது மகன் இப்போதே புரிந்துகொள்கிறான்.

குழந்தை பெற்றபிறகும் விளையாடுவதன்மூலம், உண்மையில் சில இளம்பெண்கள், குறிப்பாக இளம் தாய்மார்கள் குழந்தை பெற்றப்பிறகும், அவர்களின் கனவுகளைப் பின்பற்ற நான் ஊக்கமாக இருப்பதாக நம்புகிறேன். கொரோனா தொற்றுநோய் பரவல் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. ஏனெனில், வருடம் முழுவதும் தடுப்பூசி செலுத்தாத சிறு குழந்தையுடன் பயணம் செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. மேலும் குழந்தையை அவ்வாறு தூக்கிச் சென்றால், மகனை ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், அது எனக்கு நியாயமாகப்படவில்லை. இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் விரைவில் நல்ல முடிவு கண்டுபிடிக்க வேண்டும். எனது உடல் விரைவில் சரியாகிவிடும் என்பதால், எனது முடிவை மாற்றிக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.