விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர்: சானியா மிர்சா விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர்: சானியா மிர்சா விலகல்

jagadeesh

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியிலிருந்து சானியா மிர்சா விலகுவதாக அறிவித்துள்ளார். முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைப் பிடிப்பு காரணமாக இரட்டையிர் பிரிவிலிருந்து விலகுவதாக விளக்கமளித்துள்ளார். ஆனால், ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க போவதாக தெரிவித்துள்ளார்.

கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுவதாக இருந்தார் சானியா. கலப்பு இரட்டையரில் விளையாடுவதால் காலில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல்போக கூடிய வாய்ப்பு இருப்பதால், ஏதாவது ஒரு பிரிவில் பங்கேற்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் உக்ரைன் வீராங்கனை நாடியாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் போட்டியில் களம் கண்டார் சானியா. தொடரின் அனைத்து போட்டிகளிலும் முழு ஆற்றலை வெளிப்படுத்தி வந்த இந்த இணை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சீன வீராங்கனைகள் பெங் ஷூவாய், ஸாங் ஷூவாய் இணையை எதிர்த்து சானியா - நாடியா இணை களம் கண்டது. உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சானியா -நாடியா ஜோடி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.