இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா மீது ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சனத் ஜெயசூர்யா(49). இலங்கை அணிக்காக மிக நீண்ட காலம் விளையாடியவர். இவர் இலங்கை அணிக்காக 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,430 ரன் குவித்துள்ளார். அதேபோல், 110 டெஸ்ட் போட்டிகளில் 6973 ரன் எடுத்துள்ளார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தார். முதற்கட்டமாக 2013 முதல் 2015 வரையில் பொறுப்பில் இருந்த ஜெயசூர்யா, பின்னர் 2016 முதல் 2017 வரை தலைவராக இருந்தார். ஜெயசூர்யா காலக்கட்டத்தில் வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், தேர்வுக்குழுத் தலைவராக இருந்த ஜெயசூர்யா மீது ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆவணங்களை அழித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தன் மீதான ஊழல் புகார் குறித்து இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.