விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்: அறிமுக போட்டியில் முச்சதம் அடித்து அசத்திய `சகிபுல் கனி’

ரஞ்சி கிரிக்கெட்: அறிமுக போட்டியில் முச்சதம் அடித்து அசத்திய `சகிபுல் கனி’

நிவேதா ஜெகராஜா

ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் முச்சதம் அடித்து பீகாரை சேர்ந்த வீரர் சகிபுல் கனி சாதனை படைத்துள்ளார்.

நேற்று தொடங்கியுள்ள ரஞ்சி கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 26-ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது. மொத்தம் 38 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்நிலையில் மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில், முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிபுல் கனி சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 404 பந்துகளில் 56 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 341 ரன்களை குவித்துள்ளார், 22 வயதாகும் கிரிக்கெட் வீரர் சகிபுல் கனி. இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டின் அறிமுக போட்டியில் முச்சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சகிபுல் கனி.

இதற்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த அஜய் ரொஹெரா, 2018/19-ல் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் 267 ரன்கள் எடுத்து, ஆட்டமிழக்காமல் இருந்ததே, அதிகபட்ச ரன்களாக இருந்த நிலையில், தற்போது இந்த ரெக்கார்டை முறியடித்துள்ளார் சகிபுல்.

தனது இந்த முச்சதத்தை, சரியாக 387 பந்துகளில் 50 பவுண்டரிகளுடன் தொட்டிருக்கிறார் சகிபுல். இந்த போட்டி, கல்காத்திவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளகாத்திலுள்ள 2-வது மைதானத்தில் நடத்துவருகிறது. நடந்துக்கொண்டிருக்கும் இப்போட்டியில், மிசோரம் அணியும் - பீகார் அணியும் மோதிக்கொண்டிருக்கின்றன.

இதில் முதலில் பீகார் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருந்தது. இதில் சகிபுல் கனியுடன், 4வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பாபுல் குமார் என்பவரும் இணைந்து, அவரும் இரட்டை சதம் கண்டுள்ளார். இதன் மூலம், சகிபுல் கானி - பாபுல் குமார் கூட்டணி, கிட்டத்தட்ட 500 + ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் வென்றுள்ளது. இதனால் பீகார் அணியின் மொத்த ரன்கள், 600-ஐ கடந்துள்ளது.