“இந்திய கிரிக்கெட் வீரர்களைவிட பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து வீரர்கள் உடல் அளவில் வலிமையானவர்கள்” என சாய்னா நேவால் கூறி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரகுவன்ஷி, "சாய்னா நேவால் பும்ராவின் 150 கிலோ மீட்டர் பந்தை எதிர்கொள்வதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்" எனப் பதிவிட்டு இருந்தார்.
ரகுவன்ஷியின் விமர்சனத்திற்கு மறைமுகமாக பதிலளித்த சாய்னா நேவால், “கிரிக்கெட்டில் எல்லாரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போல் ஆகிவிடுகிறார்களா? சிலர் மட்டுமே அந்த இடத்தை அடைகிறார்கள். கிரிக்கெட் ஒரு திறன் சார்ந்த விளையாட்டு என நான் கருதுகிறேன். பந்துவீச்சாளர்கள் வேண்டுமானால் வலிமையாக இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
நான் நிச்சயமாக பும்ராவின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்வேன். ஆனால் பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவர் எனது ஸ்மாஷ்-ஐ சந்திக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “நாம் நமது நாட்டுக்குள்ளே இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. ஆனால், நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள் என்றுதான் நான் கூறுகிறேன். எப்போதும் நாம் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீதுதான் கவனம் செலுத்துகிறோம். கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான வசதிகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இருப்பதில்லை” எனத் தெரிவித்தார்.
கிரிக்கெட் குறித்து சாய்னா நேவால் விமர்சித்ததற்காகப் பலரும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.