ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நிவாரண நிதி திரட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கண்காட்சி போட்டி நடைபெறுகிறது. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையில் களமிறங்கும் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட 3 தன்னார்வலர்கள் உள்பட இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகின. இந்தக் காட்டுத் தீயில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின. சுமார் 60 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பு, காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் ஆஸ்திரேலியா மீண்டு வர கடுமையாக போராடி வருகின்றன. காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காகப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கண்காட்சி கிரிக்கெட் ஆட்டம் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்கிற பெயரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பாண்டிங், வார்னர், ஜஸ்டின் லாங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஷேன் வாட்சன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கேல் கிளார்க் போன்றோர் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வார்னே அணிக்கு கோர்ட்னி வால்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கெவின் ராபர்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.