விளையாட்டு

4 ஆயிரம் ஏழை மக்களுக்கு நிதியுதவி அளித்த சச்சின் டெண்டுல்கர் !

4 ஆயிரம் ஏழை மக்களுக்கு நிதியுதவி அளித்த சச்சின் டெண்டுல்கர் !

jagadeesh

மும்பை மாநகரில் கொரோனா வைரஸ் காரணமாகத் தொழிலின்றி வருமானம் இல்லாமல் வாடும் 4000 ஏழைக் குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் தன்னார்வ அமைப்பு மூலம் நிதியுதவி வழங்கியுள்ளார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இந்தப் பொது முடக்கம் மே 17 ஆம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாகத் தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு உதவி செய்தும் அவர்களின் தேவை பூர்த்தியடையவில்லை. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்கள் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் நன்கொடையாக வழங்கினார். மேலும் அப்னாலயா என்ற அறக்கட்டளை மூலம் 5000 ஏழை மக்களுக்கு ஒரு மாதத்துக்கான நிதி செலவை ஏற்றார். இதற்காக அந்த அறக்கட்டளை சச்சினுக்கு மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தது.

இந்நிலையில் மீண்டும் மும்பையில் உள்ள 4000 பேருக்குத் தன்னார்வ அமைப்பு மூலம் நிதியுதவி வழங்கியுள்ளார். சச்சின் கொடுத்த நிதியின் விவரம் குறித்து அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இது குறித்துத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு கூறியுள்ள குறிப்பில், "உங்களின் நிதியுதவி 4000 ஏழை மக்களுக்கு உதவும், அது மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் சேரும். இது எங்களுக்கு மிகவும் உறுதுணையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. நன்றிகள்." எனத் தெரிவித்துள்ளது.