இந்திய அணியை வழி நடத்த சச்சின் டெண்டுல்கர் சிரமப்பட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
"ஸ்போர்ட்ஸ்கீடா" இணையதளத்துக்கு பேட்டியளித்த மதன் லால், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் "சச்சின் டெண்டுல்கர் சிறந்த கேப்டன் இல்லை என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தன்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டார்".
மேலும் தொடர்ந்த மதன் லால் "அதனால் ஒரு அணியை அவரால் சரியாக வழி நடத்த முடியாமல் போனது. ஒரு கேப்டனாக இருந்தால், தான் மட்டுமே சிறப்பாக விளையாடினால் போதாது, மீதமுள்ள 10 பேரையும் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும்" என்றார்.
1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்ற மதன் லால் இந்தியாவுக்காக 39 டெஸ்ட் போட்டிகளிலும் 67 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். பின்பு 1996 - 1997 ஆம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.