விளையாட்டு

வரலாற்றில் இன்று: இதே நாள்... இதே நேரம்! 2010-ல் சச்சின் செய்த இமாலய சாதனை

வரலாற்றில் இன்று: இதே நாள்... இதே நேரம்! 2010-ல் சச்சின் செய்த இமாலய சாதனை

webteam

இன்றைய தேதியில் சச்சின் டெண்டுல்கர் அடித்த முதல் இரட்டைச் சதத்தை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

எல்லா நாட்களும் வரலாற்றில் இடம்பிடிப்பதில்லை. அப்படி வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒருசில நாட்கள், மகத்தான சாதனைகளைப் படைத்ததாக விளங்குகின்றன. அந்த வகையில் பிப் 24-ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தார்; திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி மரணமடைந்தார். இரண்டுமே வெவ்வேறு ஆண்டுகளில் ஏற்பட்டவைதான். அதேபோல இந்நாளுக்கு மற்றொரு வரலாற்று பின்னணியும் இருக்கிறது. அது, விளையாட்டு உலகில் நிகழ்ந்த மகத்தான சாதனையென்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அதுவும், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், மாஸ்டர், ரன் மெஷின் என அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரால் நிகழ்த்தப்பட்டது.

முறியடிக்கப்படாத சாதனை

ஆம், பல்லாண்டுக் காலமாய் பல வீரர்களுக்கும் கனவாகவே நீடித்துவந்த ‘ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம்’ என்ற இமாலய சாதனை, இந்த நாளில்தான் சச்சினுக்கு நனவானது. முதன்முதலில் 1984-ல் இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்களே உலக கிரிக்கெட் அரங்கில் அதிகபட்ச ரன்னாக இருந்தது. அதை 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்கள் எடுத்து முறியடித்து, வரலாறு படைத்திருந்தார்.இவருடைய சாதனையை முடிக்க அந்தக் கால இந்தியாவின் மூத்த வீரர்கள் (சச்சின் 186, கங்குலி 183) முயற்சி செய்தபோதும் அது கைகூட வில்லை.

சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்கிஸ் பலமுறை 200 ரன்கள் எடுத்த வீரர்கள், 300-400 ரன்கள் எடுத்த ஜாம்பவான்கள்கூட ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடிக்க முடியாமல் அவுட்டாகி வெளியேறி இருப்பார்கள் அல்லது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்திருக்கும். இப்படி நீண்டகாலமாய்த் தொடர்ந்த சயீத் அன்வர் சாதனை மற்றும் ஒருநாள் போட்டியில் 200 என்ற கனவு ஆகியவற்றை, கிரிக்கெட் உலகில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியே சச்சின் முதன்முறையாக முறியடித்தார். புதிய சாதனை படைத்தார் சச்சின். அவர் அன்று படைத்த இந்த முதல் சாதனை கிரிக்கெட் ரசிகர்களால் இன்று நினைவுகூறப்பட்டு வருகிறது.

சச்சின் படைத்த முதல் இரட்டைச் சதம்

அது எப்போது நிகழ்ந்தது தெரியுமா? சரியாக 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, குவாலியரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. அப்போத்தான்! இதில் சச்சின் ஆட்டமிழக்காமல் 200 ரன்களும் எடுத்திருந்தார். கிரிக்கெட் உலகில் முதல்முறையாக இரட்டைச் சதம் எடுத்து, அப்போது வரலாற்றில் பதிவு செய்தார் சச்சின். 147 பந்துகளில் 25 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை எடுத்து மகத்தான சரித்திரம் படைத்தார் அவர். ஒருநாள் போட்டியிலும் இரட்டைச் சதம் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை மற்ற வீரர்களுக்கு உணர்த்தியவர் சச்சின் மட்டும்தான். அதனால்தான் சச்சின் அடித்த அந்த நாள், என்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.

ரோகித் சர்மா 3 முறை இரட்டைச் சதம்

சச்சினுக்குப் பிறகு மற்றொரு இந்திய அணி வீரரான வீரேந்திர சேவாக், 2011ஆம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்தார். இதில் இன்னுமொருபடி மேலே சென்று, 3 முறை இரட்டைச் சதம் அடித்தவர்கள் பட்டியலில் தற்போதைய இந்திய அணி கேப்டனான ரோகித் சர்மாவே முதல் இடத்தில் உள்ளார். ரோகித் ஷர்மா, இலங்கைக்கு எதிராக 2 முறையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருமுறையும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் (பாகர் ஜமான்), வெஸ்ட் இண்டீஸ் (கெய்ல்), நியூசிலாந்து (குப்தில்) அணி வீரர்களும் இரட்டைச் சதம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் மகளிர் அடித்த இரட்டைச் சதம்

சச்சின் எப்படி, இன்றைய நாளில் இந்த சாதனையை நிகழ்த்தினாரோ, அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லும், இதே நாளில் 2015ஆம் ஆண்டில் உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இதே சாதனையை நிகழ்த்தினார். அதன்மூலம் ஆடவர் உலகக்கோப்பை தொடரில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்தார். ஆடவர் கிரிக்கெட்டில், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 2010ஆம் ஆண்டு இரட்டைச் சதத்தை எடுப்பதற்கு முன்பாகவே, முதன்முதலாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த என்ற பெருமை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பெலிண்டா கிளார்க்கையே சேரும். இவர், 1997ஆம் ஆண்டு, மகளிர் உலகக்கோப்பை தொடரில் டென்மார்க் அணிக்கு எதிராக 229 ரன்களை எடுத்துள்ளார்.

பிப்ரவரி 24-ஐ பொறுத்தவரை, இதே நாளில் சச்சின் மேலும் ஒரு சாதனையை சச்சின் படைத்துள்ளார். அது என்னவெனில், 1988ஆம் ஆண்டு இதே தேதியீல்தான் தன் பள்ளிக்காலத்தில், சச்சினும் அவரது நண்பரும் இணைந்து ஒரு போட்டியில் 664 ரன்கள் எடுத்தனர். இதில், டெண்டுல்கர் 326 ரன்களும், காம்ப்ளி 349 ரன்களும் எடுத்தனர். இந்த ஜாம்பவான்களை பார்த்துவளரும் இந்த தலைமுறை, இன்று பலரையும் கவர்ந்திழுக்கும் டி20 போட்டிகளிலும் இரட்டைச் சதங்கள் அடித்து வருகின்றன!

- ஜெ.பிரகாஷ்