காதலர் தினமான இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு "இதுதான் என் முதல் காதல்" என பதிவிட்டுள்ளார்.
உலகெங்கிலும் இருக்கும் இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் இன்று காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். பல்வேறு பிரபலங்ளும், விளையாட்டு வீரர்களும் சமூக வலைத்தளத்தில் தங்கள் மனைவி, காதலியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தான் வலைப் பயிற்சியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு "என் முதல் காதல்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட சச்சினின் மனைவியான அஞ்சலி ஒருபேட்டியில் "அவருடைய முதல் காதல் கிரிக்கெட்தான், அதன் பின்புதான் நான்" என கூறியிருந்தார். இப்போது அதனை வீடியோவாக வெளியிட்டு அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றும் கிரிக்கெட் மீதான தன் காதலை, இன்றைய தினத்தில் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் கூட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காட்சிப் போட்டியில் சச்சின் விளையாடினால், அதிகமாக நிதித் திரட்ட முடியும் என்று ஆஸ்திரேலியாவின் பெண்கள் அணியைச் சேர்ந்த எல்லிஸி பெர்ரி சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட சச்சின் ஒரு ஓவர் விளையாடுவதாக ஒப்புக்கொண்டார். அதன்படி மஞ்சள் நிற சீருடையுடன் சச்சின் மீண்டும் களம் இறங்கினார்.
மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்ப, தான் சந்தித்த முதல் பந்தை தனக்கே உரித்தான ஸ்டைலில் பவுண்டரிக்கு அனுப்பினார் சச்சின். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சச்சின், மைதானத்தில் விளையாடினார். சச்சின் விளையாடிய வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது.