பும்ரா இல்லாத நிலையில் டெத் ஓவர்களில் பந்துவீசுவது இந்தியாவிற்கு கடினமானதாக இருக்கும் எனவும், அதற்கு மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் இந்திய அணி தேர்வாளர் சபா கரீம் கூறியுள்ளார்.
முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பும்ரா தொடர்ந்து மருத்துவர்களின் மேற்பார்வையில் இருந்துவருகிறார். இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா உலக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், முதுகுப்பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக 6 மாதத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மற்ற போட்டிகளில் விளையாட பும்ராவிற்கு பதிலாக சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் பந்துவீச்சு குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய அணித்தேர்வாளர் சபா கரீம், ”பும்ரா ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அடியாக விழுந்துள்ளது. முதல் பவர்-ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுத்து கொடுக்கவும், பின்னர் கடைசியில் வந்து டெத் ஓவர்களில் ரன்களை கண்ட்ரோலில் வைத்து சிறப்பாக பந்துவீசவும் கூடிய பந்துவீச்சாளர் பும்ரா. அவர் இல்லாததை சரிசெய்வது கடினமான ஒன்று. பும்ரா இல்லாததை சரி செய்ய மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பவர்-ப்ளேவில் சிறப்பாக பந்துவீச இந்திய அணிக்கு சில சாத்தியமான விஷயங்கள் உள்ளன. ஏனெனில் இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். முந்தைய போட்டிகளில் பார்த்தது போல டெத் ஓவர்களில் பந்துவீச அர்ஷ்தீப் சிங் இருக்கிறார். அவர் அந்த பொறுப்பை எடுத்து இன்னும் முன்னேற வேண்டும். முகமது ஷமியைப் போன்ற ஒரு வீரரும் இந்தியாவிடம் இருக்கிறார். இந்திய அணியின் தேர்வாக புவனேஷ் குமார், முகமது ஷமி மற்றும் அர்ஸ்தீப்சிங் இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கெதிரான போட்டிகளில் அர்ஸ்தீப்சிங் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.