விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் ரஷ்யா - சவுதி அரேபியா மோதல் !

இனி அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை உலக கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆம், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நாளை தொடங்குகிறது உலகக் கோப்பை காலபந்துப் போட்டிகள். தொடக்க விழாவுக்காக மாஸ்கோ நகரின் லூசினிக்கி விளையாட்டுத் திடல் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. பிரபல இசை மற்றும் நடனக் கலைஞர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மாஸ்கோவில் குவிந்துள்ளனர். 

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகளின் அணிகள் கலந்துக்கொள்கின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 14 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷ்ய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. கால்பந்து உலக்கோப்பை முதல் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.