விளையாட்டு

இந்தியாவுக்கு சாதகமாக எல்லாம் செய்திருக்கிறார்கள்' பாகிஸ்தான் கேப்டன் புகார்

இந்தியாவுக்கு சாதகமாக எல்லாம் செய்திருக்கிறார்கள்' பாகிஸ்தான் கேப்டன் புகார்

இந்தியாவிற்கு சாதகமான வகையில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், வங்களா தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் அடுத்த சுற்றுக்கு விளையாடவுள்ள அணிகளின் விவரம் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இப்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அடுத்தச் சுற்றுக்கு பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தகுதிப் பெற இருக்கின்றது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

ஆசியக் கோப்பையில் இருந்து இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் தோல்வி காரணமாக வெளியேறி இருக்கின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டியளித்துள்ளார் அதில் " இந்த தொடருக்கான முதலில் வெளியிடப்பட்ட கால அட்டவணையில், இந்தியா சில போட்டிகளில் அபுதாபியில் விளையாடும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது அனைத்துப் போட்டிகளும் துபாயில் விளையாடும் வகையில் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பான குற்றச்சாட்டை மேலும் தொடர்ந்த சர்பராஸ் அகமது " போட்டி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் என்ற அணிகள் எல்லாம் பார்க்கக் கூடாது. அட்டவணையை மாற்றியது தொடர்பாக ஆசியக் கிரிக்கெட் சங்கத்தின் தலையீடு அதிகமாக இருந்திருக்கக் கூடும். இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

சர்பராஸ் அகமதின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த பிசிசிஐயின் மூத்த உறுப்பினர் ஒருவர் " அபு தாபியில் இருக்கும் ஷேக் ஜாயத் ஸ்டேடியத்தை விட துபாயில் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியிடம் மிகப் பெரியது. ஏறக்குறைய 30 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டியை நேரில் கண்டுக்களிக்கலாம். அதிகப்படியான ரசிகர்கள் போட்டியை கண்டு மகிழ வேண்டும் என்பதற்காகவே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது" என கூறியுள்ளார்.