விளையாட்டு

வெளுத்து வாங்கிய வார்னர், பவல்.. டெல்லி 207 ரன் குவிப்பு - இமாலய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ்

வெளுத்து வாங்கிய வார்னர், பவல்.. டெல்லி 207 ரன் குவிப்பு - இமாலய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ்

சங்கீதா

50-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 50-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் பிருத்வி ஷாவுக்கு பதிலாக துவக்க ஆட்டக்காரராக மன்தீப் சிங் களமிறக்கப்பட்டார். ஆனால் முதல் ஓவரிலேயே, புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில், மிச்செல் மார்ஷ் 10 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பந்த் 26 ரன்களிலும் அவுட்டாகினர். இதையடுத்து டேவிட் வார்னருடன் இணைந்த ரோவ்மன் பவல் தனது அதிரடி ஆட்டத்தால், டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் துவம்சம் செய்தார். கடைசி ஓவரில் அவர், 18 ரன்கள் விளாசினார்.

இறுதியாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. 52 பந்துகளில் 92 ரன்களுடன் டேவிட் வார்னரும், 35 பந்துகளில் 67 ரன்களுடன் ரோவ்மன் பவலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியில், சீன் அபோட், புவனேஷ்வர் குமார், ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரரான இரண்டாவது ஓவரில் 7 ரன்கள் எடுத்தநிலையில், கலீல் அகமது பந்துவீச்சில் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராகுல் திரிபாதி தற்போது விளையாடி வருகின்றனர்.