விளையாட்டு

மான்செஸ்டரை விட்டு வெளியேறும் ரொனால்டோ மகன்? CR7 சவுதி கிளப் செல்வதற்கு வாய்ப்பு?

மான்செஸ்டரை விட்டு வெளியேறும் ரொனால்டோ மகன்? CR7 சவுதி கிளப் செல்வதற்கு வாய்ப்பு?

Rishan Vengai

மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற்றப்பட்டதற்கு பிறகு, அவருடைய மகனான ரொனால்டோ ஜூனியரும் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாஸ் பிளாங்கோஸ் அகாடமியில், ரொனால்டோ ஜூனியர் 20 ஆட்டங்களில் இருந்து 50 கோல்களை அடித்திருந்த அவர் ஒரு வருடத்திற்கு முன்பு ஜுவென்டஸில் இருந்து யுனைடெட் அணிக்கு மாற்றப்பட்டபோது தனது தந்தையுடன் ஓல்ட் டிராஃபோர்டுக்கு திரும்பினார். இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டுடன் ஏற்பட்ட விரிசலிற்கு பிறகு வெளியேற்றப்பட்டதற்கு பின், அவருடைய மகனான ரொனால்டோ ஜூனியர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறி மீண்டும் ரியல் மாட்ரிட் யூத் அகாடமியில் சேர்ந்துள்ளார் என்று ஸ்பெயினில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் பியர்ஸ் மோர்கனுடன் ஒரு சர்ச்சைக்குரிய நேர்காணலை அளித்திருந்தார். அந்த நேர்காணலுக்கு பிறகே அவர் மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். அந்த நேர்காணலில் பேசியிருந்த அவர் "ஆம், நான் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்ந்தேன். சிலர் என்னை இங்கு விரும்பவில்லை (மான்செஸ்டர் யுனைடெட்). இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த ஆண்டும் கூட" என்று கூறியிருந்தார்.

அந்த நேர்காணல் சர்ச்சைக்கு பிறகு, ரொனால்டோவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள மான்செஸ்டர் யுனைடெட் முடிவு செய்து, கடந்த நவம்பரில் "கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுவார்" என்று அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் ஓல்ட் டிராஃபோர்டை விட்டு வெளியேறியதில் இருந்து, ரொனால்டோ எந்தவொரு கிளப்பிலும் இல்லாமல் இருக்கிறார். சமீபத்தில் அவர் சவுதி அரேபிய கிளப் அல்-நாஸ்ரில் சேருவார் என்று வதந்திகள் வந்தன.

சவுதி அரேபியா கிளப்புக்கான நகர்வு பற்றிய யூகங்களுக்கு மத்தியில், அல் நாஸர் கிளப்பின் விளையாட்டு இயக்குனர் மார்செலோ சலாசர் இதுகுறித்து பேசியிருந்தபோது, ரொனால்டோவிற்காக எப்போதும் சவுதி கிளப் "காத்திருக்கும்" மற்றும் "சரியான நேரத்தில் எதிர்காலம் வெளிப்படும்" என்று கூறியிருந்தார்.

பேட்டியில் பேசியிருந்த மார்செலோ சலாசர், “ஆம் அல்லது இல்லை என்று சொல்ல எனக்கு அனுமதி இல்லை. இந்த ஆண்டு இறுதி வரை விஷயங்கள் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இது கிளப்பிற்கு மட்டுமல்ல; நாட்டிற்கும் உலக கால்பந்துக்கும் மிகப்பெரிய அளவிலான பேச்சுவார்த்தையாகும். மேலும் இது உயர் அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டும்.

நான் என்ன சொல்ல முடியும் என்றால், கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் சிறந்தவர்களில் ஒருவர். ஒரு தடகள வீரராக அவர் எனக்கு எப்போதும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வெற்றிபெற அவர் காட்டும் விருப்பம். பின்னர், ஒரு போர்ச்சுக்கல் குடிமகனாக, நான் எப்போதும் அவரை உற்சாகப்படுத்தினேன். இருப்பினும் சரியான நேரம் வரும்போது தான் எதிர்காலம் வெளிப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.