விளையாட்டு

இரட்டை சதம் விளாசினார் ரோகித்: இந்தியா 392 ரன்கள் குவிப்பு

இரட்டை சதம் விளாசினார் ரோகித்: இந்தியா 392 ரன்கள் குவிப்பு

rajakannan

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 392 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார்.

மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகார் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் அதிரடியாக பவுண்டரிகளை அடிக்க மறுமுனையில் ரோகித் நிதானமாக விளையாடினார். தவான் 67 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த முறையும் ஷ்ரேயாஸ் அதிரடியாக விளையாட ரோகித் நிதானமாக விளையாடினார். ரோகித் 65 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஸ்ரேயாஸ் 50 பந்துகளில் அரைசதம் அடித்தனர். இது ஸ்ரேயாஸுக்கு முதல் அரைசதம்.

நிதானமாக விளையாடிய ரோகித் 115 பந்துகளில் சதம் அடித்தார். சதம் அடித்தது தான் தாமதம், அதன் பின்னர் சிக்ஸர் மழையை ரோகித் பொழிந்தார். ஸ்ரேயாஸ் 88 ரன்களில் ஆட்டமிழக்க 4-வது விக்கெட்டுக்கு தோனி இறங்கினார். தோனி ஒரு சிக்ஸர் மட்டும் விளாசி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 

விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா, சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசி ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடி ரோகித் 151 பந்துகளில் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு மூன்றாவது இரட்டை சதம் ஆகும். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்தது. 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து பாண்ட்யா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 153 பந்துகளில் 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும்.

இலங்கை அணி தரப்பில் பெராரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலங்கை அணி 393 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வருகிறது. கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.