இந்திய பேட்ஸ்மேன் மற்றும் ரசிகர்களால் செல்லமாக ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோகித் சர்மா தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கில் சொதப்பி வருவது அணிக்கு கவலை தரும் விதமாக மாறி வருகிறது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த அணி மொத்தம் 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இப்போது சென்னையில் முதல் டெஸ்ட் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்தியா வெற்றிப்பெற நாளை 381 ரன்கள் தேவை. 4 ஆம் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா இழந்த 1 விக்கெட் ரோகித் சர்மாவுடையது.
இந்த டெஸ்ட் தொடர் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி இரண்டு டெஸ்ட்டிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோகித் சர்மா. ஆனாலும் இந்தியாவில் டெஸ் போட்டி நடைபெறுவதால் இங்கு அதிரடி சரவெடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸில் 6 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார். அதுவும் ரோகித் சர்மா ஆட்டமிழந்த வகை இந்திய டிரெஸிங் ரூமுக்கு கவலை தரும்விதமாகவே இருக்கும்.
ஒட்டுமொத்தமாக ரோகித் சர்மா தன்னுடைய கடைசி 8 டெஸ்ட் இன்னிங்ஸில் எடுத்த ரன்கள் 6,21,26,52,44,7,6,12 அவ்வளவுதான் என்பது அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது. அதுவும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் நல்ல பார்மில் இருந்தபோது தேவையில்லாத ஷாட் அடித்து அசட்டுத்தனமாக அவுட்டானதும் பேசு பொருளானாது. இந்திய தொடக்க வீரராக களமிறங்க இந்தியாவுக்கு ஆப்ஷன்கள் உள்ளன என்பதை ரோகித் சர்மா மறந்துவிட்டாரா என தெரியவில்லை.
எப்போது ரோகித் சர்மா சொதப்புவார் நமக்கு மீண்டும் வாய்ப்பு வரும் என பெஞ்சில் காத்திருக்கிறார்கள் மயாங்க் அகர்வாலும், பிருத்வி ஷாவும். ரோகித் சர்மா இப்படியே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய ஓப்பனர்களாக களமிறங்க மீண்டும் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
ஏற்கெனவே மற்றொரு இளம் தொடக்க வீரரான சுப்மன் கில் சிறப்பாகவே விளையாடி வருகிறார். அநேகமாக அடுத்த டெஸ்ட்டிலும் ரோகித் களமிறக்கப்படுவார். அதிலும் சொதப்பினால் அகமதாபாத் டெஸ்ட்டில் ரோகித் நிச்சயம் அணியில் இருக்கமாட்டார் என்பதே நிதர்சனம்.