பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரோகித் சர்மாவுக்கு மேற்கொள்ளப்பட்ட உடல்தகுதி சோதனையில் அவர் தகுதிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரைக் கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று நடைபெறும் உடல் தகுதி சோதனையில் ரோகித் சர்மா தகுதிபெறும் பட்சத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அவரை அனுப்பி வைப்பது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும் என்ற நிலை இருந்தது. இதனையடுத்து ரோகித் சர்மாவுக்கு மேற்கொள்ளப்பட்ட உடல்தகுதி சோதனையில் அவர் வெற்றிப்பெற்றார்.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரி ஒருவர் கூறும்போது "ரோகித் சர்மா உடல் தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றுவிட்டார். இதற்கடுத்து அடுத்தக்கட்ட முடிவை பிசிசிஐயும் தேர்வாளர் குழுவும்தான் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.