ரோகித் சர்மா web
விளையாட்டு

IPL 2025| மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித்? ரூ.20 கோடிக்கு வாங்க தயாராகும் அணிகள்!

Prakash J

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, அவ்வணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்தார். இந்த நிலையில், கடந்த ஐபிஎல்லின்போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அவர், கேப்டனாக நியமிக்கப்பட்டதை அந்த அணியின் ரசிகர்களே விரும்பவில்லை.

இதனால் தொடரின் ஆரம்பம் முதலே ரசிகர்களின் எதிர்ப்பைச் சந்தித்தார். தவிர, அந்த அணியின் வீரர்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு இல்லை. இதனால் அந்த அணி, கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் கடைசி இடத்தைப் பிடித்தது. இது, மேலும் அவருக்கு எதிராக விமர்சனங்களை வைத்தது. இதற்கு, அவருடைய குடும்பப் பிரச்னையும் காரணமாகச் சொல்லப்பட்டது. தற்போது குடும்பப் பிரச்னையில் இருந்து தீர்வு பெற்றுள்ளார்.

ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா

இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் தொடர் பற்றி அனைத்து அணி நிர்வாகங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, கடந்த முறை மும்பை அணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, ரோகித் சர்மா அந்த அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ரோகித் சர்மாவும், மும்பை அணி நிர்வாகமும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் டெல்லி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் ரோகித் சர்மாவை வாங்க தயாராக இருக்கின்றன. 2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தின்போது எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலம் எடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, இரு அணிகளும் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கே.எல்.ராகுல் நடத்திய ஏலம்.. ரூ.40 லட்சத்திற்கு ஏலம் போன விராட் கோலியின் ஜெர்சி!

அடுத்த சீசனுக்கு முன்பாக ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. இதில், 4 இந்திய வீரர்களைத்தான் மும்பை அணியால் தக்க வைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரைத் தவிர்த்து, ரோகித் சர்மாவை தக்கவைக்க முயலும். அப்படிச் செய்வது மும்பை அணிக்கு ஏலத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும்.

இதனால் ரோகித் சர்மாவை ஆர்டிஎம் மூலமாகவே மீண்டும் வாங்க மும்பை முயற்சிக்கும். ஆனால் டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பதால், ரோகித் சர்மாவின் பிராண்ட் வேல்யூ உச்சத்தில் உள்ளது. அவரை வாங்கினால் தங்கள் அணியின் ரசிகர்களின் பட்டாளம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

rohit sharma

இதனால் லக்னோ, டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகி அணிகள் அவரை வாங்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, லக்னோ அணியின் உரிமையாளர் ரோகித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக உள்ளார். தவிர, ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ்-க்கு வயதாகிவிட்ட காரணத்தால் அவருக்குப் பதில் ரோகித் சர்மாவை வாங்கவும் அந்த அணி முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், கோலி - ரோகித் இணை சிறப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் ஷிகர் தவானும் ஓய்வை அறிவித்திருப்பதால், பஞ்சாப் அணிக்காக ரோகித் சர்மாவை வாங்கும் நிலையில் அவ்வணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் குறைந்தபட்சம் ரூ.17 முதல் ரூ.20 கோடி வரை ரோகித் சர்மாவை வாங்குவதற்கு நிச்சயம் தொகை செலவு செய்ய நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக ஒருசில அணிகள் ரூ.50 கோடி வரை ஒதுக்கீடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: மகாராஜா டி20 டிராபி: 3வது சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டம்.. இறுதியில் மணிஷ் பாண்டே அணி வெற்றி!