விளையாட்டு

காயத்தோடு களமிறங்கி வங்கதேசத்துக்கு கடைசியில் மரணபயம் காட்டிய ரோகித்! திக் திக் கடைசி ஓவர்

காயத்தோடு களமிறங்கி வங்கதேசத்துக்கு கடைசியில் மரணபயம் காட்டிய ரோகித்! திக் திக் கடைசி ஓவர்

rajakannan

காயத்தால் வெளியேறி கடை நேரத்தில் களமிறங்கிய ரோகித்!

272 என்ற இலக்கை நோக்கிய விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி 42.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்த தருணத்தில்தான் ரோகித் சர்மா 9 ஆவது ஆட்டக்காரராக களமிறங்கினார். காயம் காரணமாக பீல்டிங் செய்யும்போதே வெளியேறிய ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார். ரோகித் சர்மாவின் பெயர் பின்னாடி இருந்தது. ஒவ்வொரு வீரராக ஆட்டமிழக்க ரோகித் சர்மா பெயர் பின்னாடி சென்று கொண்டே இருந்தது. அவர் இறங்குவாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. இத்தகைய சூழலில்தான் 7 விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர் 44 பந்துகளில் 65 ரன்கள் என்ற நிலை இருக்கும் போது அவர் களத்திற்கு வந்தார்.

ரோகித் சர்மா களத்திற்கு வந்த அடுத்த இரண்டு ஓவர்களில் முறையே 3, 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அத்துடன், 46ஆவது ஓவரின் முதல் பந்தில் தீபக் சாஹரும் நடையைக் கட்டினார். இந்த இடத்தில்தான் ரோகித் சர்மா தன்னுடைய அதிரடியை தொடங்கினார். எபடோட் ஹோசை வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி தன்னுடைய அதிரடியை தொடங்கினார். அந்த ஓவரில் 18 ரன்கள் எடுக்கப்பட்டது. அத்துடன், 4 ஓவர்களில் 41 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது.

முட்டுக்கட்டையான முகமது சிராஜ்!

பந்துவீச்சிலும் ரன்களை வாரி வழங்கிய முகமது சிராஜ் ஒரு வகையில் தன்னுடைய பேட்டிங்கால் இந்திய அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தார். 47 ஆவது ஓவரை சந்தித்த அவர் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளை ரோகித் டாட் பந்துகளாக்கினார். மீண்டும் 48 ஆவது ஓவரை சந்தித்த சிராஜ் அந்த ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் மெய்டன் ஆக்கினார். ரோகித் சர்மாவுக்கு ஒரு சிங்கிள் எடுத்து கொடுத்திருந்தால் அவர் சற்றே ஆட்டத்தை நெருக்கி இருக்கக் கூடும். அந்த எதிர்பார்ப்பில்தான் அவரும் இருந்தார். ஆனால், ரோகித் சர்மாவோடு ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் கடுப்பேத்தினார் சிராஜ். இரண்டு ஓவர்கள் முற்றிலும் வீணாகப் போனதால் மீண்டும் 2 ஓவர்களில் 40 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. அதனால், இந்திய அணியின் வெற்றி கேள்விக் குறியானது.

ரோகித் அதிரடியும், வங்கதேச வீரர்களில் பதற்றமும்!

முஹ்மதுல்லா வீசிய 49 ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் ரோகித் சர்மா. அத்துடன் இரண்டு சுலபமாக கேட்சுகளை வங்கதேச வீரர்கள் கோட்டை விட்டனர். அவர்கள் பதற்றமாக இருந்ததை அவர் கேட்ச் மிஸ்ஸிங் காட்டியது. கேட்சுகள் தவறிப்போனது வங்கதேச ரசிகர்கள் மைதானத்தில் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்றனர். 49 ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுக்கப்பட்டது. சிராஜ் கடைசி பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். தற்போது ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருக்கிறது. ஆனால், 20 ரன்கள் தேவை. குறைந்த பட்சம் 3 சிக்ஸர் ஆவது விளாச வேண்டும்.

திக் திக் கடைசி ஓவர்!

கடைசி ஓவரை முஸ்தபிகூர் ரஹ்மான் வீசினார். முதல் பந்திலே டாட் பந்து ஆக்கினார். இருப்பினும் இரண்டாவது, மூன்றாவது பந்துகளில் பவுண்டரிகளை ஆஃப் சைடில் அடித்தார் ரோகித் சர்மா. பந்து ஸ்விங் மற்றும் அதிகம் மேலே எழும்பாமலே வந்ததால் சிக்ஸராக ரோகித்தால் மாற்ற முடியவில்லை. 4வது பந்தில் ரன் எடுக்க முடியாத போது 5வது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார் ரோகித். இப்போது கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை. ஒரே ஒரு சிக்ஸர் அடித்தால் வெற்றி. ஆனால், சூப்பரான யார்க்கர் வீசினார் முஸ்தபிர் ரஹ்மான். அதனால், அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் போட்டியில் வென்றிருந்ததால் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

தோற்றாலும் வங்கதேசத்திற்கு பயம் காட்டிய ரோகித்!

கிட்டதட்ட வங்கதேச அணி வெற்றி பெற்று நிலையில் இருந்த போதும் ரோகித் சர்மாவின் அதிரடியால் வெற்றி சுலபமாக அமையவில்லை. கடைசி பந்துவரை காத்திருந்து, இருக்கையின் நுனிக்கே ரசிகர்கள் செல்ல திக் திக் நிமிடங்களுடன் தான் வங்கதேசத்திற்கு அந்த வெற்றி சாத்தியமானது. ரோகித் சர்மா கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அதனால், இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.

வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. அதிரடியால் தப்பித்த ரோகித்

ரோகித் சர்மா களமிறங்கு முன்பு அவரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கில் கடுமையாக தாக்கி கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பொறுப்பேற்று அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற வேண்டும் என்று அதிரடியாக கருத்துக்களை அள்ளித்தெளித்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் களமிறங்கி சிக்ஸர் மழை பொழிந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஒருவேளை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் ரோகித்தை தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். தற்போது விமர்சனங்களில் இருந்து மட்டும் அவர் தப்பியுள்ளார்.

தோல்விக்கு என்ன காரணம்?

இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே காரணமாகவே உள்ளது. இருப்பினும் பந்துவீச்சு அதிக அளவில் இந்திய அணியை சோதிக்கிறது. 69 ரன்களுக்கு 6 இழந்துவிட்ட நிலையில், 271 ரன்கள் அடிக்கவிட்டது இந்திய அணியின் பவுலிங் தோல்வி அடைந்ததை காட்டுகிறது. முதல் ஒருநாள் போட்டியிலும் கடைசி விக்கெட்டுக்கு 50 ரன்களை விட்டுக் கொடுத்தார்கள். அதேபோல், பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் இல்லாதது, நிலைத்து நின்று இரண்டு, மூன்று வீரர்களாவது விளையாட தவறுவது போன்ற காரணங்கள் முக்கியமானவது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், வெற்றி பெற்றே ஆக வேண்டிய இன்றைய ஆட்டத்தில் 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. வங்கதேச வீரர் மெஹிடி 81 பந்துகளில் அடித்த சதமே அந்த அணியில் வெற்றிக்கு முக்கியமான காரணம். இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 82, அக்ஸர் பட்டேல் 56 ரன்கள் எடுத்தனர். இருப்பினும், முக்கியமான கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். செட்டில் ஆன வீரர் யாராவது ஒருவர் கடைசி வரை இருந்தால்தான் வெற்றிக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்.

வெற்றிநடை போடும் வங்கதேசம்!

வங்கதேச அணி வெற்றிகரமாக சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. 7 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை மீண்டும் வசப்படுத்தியுள்ளது. அத்துடன் 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு வங்கதேச அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழக்கவில்லை.