விளையாட்டு

"கொஞ்சம் பைத்தியம்பா..."- எனக்கூறி, ரன் அழைப்பை மறுத்த ரோகித்! யாரை சொன்னார் தெரியுமா?

"கொஞ்சம் பைத்தியம்பா..."- எனக்கூறி, ரன் அழைப்பை மறுத்த ரோகித்! யாரை சொன்னார் தெரியுமா?

Rishan Vengai

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லபுசனே வீசிய 77ஆவது ஓவரில், இரண்டாவது ரன்னை மறுத்து ரோகித் சர்மா பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. இந்நிலையில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது நேற்று தொடங்கப்பட்டது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில், தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும், ஆஸ்திரேலியாவின் ஓபனிங்க் பேட்டர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்ற, 2 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி.

பின்னர் கைக்கோர்த்த லபுசனே மற்றும் ஸ்மித் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஆனால் அதற்கு பிறகு பந்துவீச வந்த ஜடேஜா ஆஸ்திரேலியாவை தனது சுழலில் திக்குமுக்காட வைத்தார். அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி, 177 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆஸ்திரேலியாவின் இளம் சுழற்பந்துவீச்சாளரான டோட் முர்பி, தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கே எல் ராகுலை 20 ரன்களை வெளியேற்றிய முர்பி, சீரான இடைவெளியில் அஸ்வின், புஜாரா, விராட் கோலி என அடுத்தடுத்து பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ஒரு புறம் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் தனது 9ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். நாக்பூரில் அடித்த 9ஆவது டெஸ்ட் சதத்திற்கு பிறகு, கிரிக்கெட்டின் ஒடிஐ, டி20, டெஸ்ட் என மூன்றுவிதமான வடிவங்களிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார் ரோகித் சர்மா.

பின்னர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், 81ஆவது ஓவரில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். 212 பந்துகளில் 15 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசிய ரோகித் 120 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ரோகித் அவுட்டாவதற்கு முன்னதாக லபுசனே வீசிய 77ஆவது ஓவரில், ஜடேஜாவின் இரண்டாவது ரன்னிற்கான அழைப்பை மறுத்து “பஹல் ஹை தோடா” என்று ரோகித் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்டம்ப் மைக்கில் பதிவானதும், அங்கு நடந்ததும்:

77ஆவது ஓவரில் லபுசனே வீசிய இரண்டாவது பந்தை சந்தித்த ஜடேஜா, சிங்கிள் தட்டிவிட்டு போக, அந்த பந்தை ஸ்டீவ் ஸ்மித் வேகமாக போவார். ஆனால் போய் பந்தை எடுக்காமல், மெதுவாக ஓடி பந்தை தடுத்து நிறுத்துவார் ஸ்மித். அப்போது ஸ்மித் மெதுவாக ஓடுவதை பார்த்த ஜடேஜா, ரோகித்தை இரண்டாவது ரன்னிற்கு அழைப்பார்.

ஜடேஜாவின் 2ஆவது ரன்னிற்கான அழைப்பை மறுத்த ரோகித் சர்மா “பாஹல் ஹை தோடா (Pagal hai thoda)”  என்று கூறி ரன் ஓடாமல் அங்கேயே நிற்பார். அதாவது, “அவர் (ஸ்மித்) உண்மையிலேயே கொஞ்சம் பைத்தியம்” என்பார் ரோகித். பந்தை மெதுவாக எடுக்கச்செல்லும் ஸ்மித், திடீரென வேகமாக வந்துவிடுவார் என்பதையே ரோகித் அப்படி குறிப்பிட்டதாக தெரிகிறது. ரோகித்தின் ஆடியோ உள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார் ரோகித் சர்மா.