விளையாட்டு

கோலி, காம்பீர் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ரோகித்

கோலி, காம்பீர் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ரோகித்

webteam

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்ததன் மூலம் ரோகித் சர்மா ஒரு சாதனையை படைத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா முதல் முறையாக களமிறங்கனார். இவர் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அத்துடன் 3 போட்டிகளில் மொத்தமாக 529 ரன்கள் அடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஐசிசியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்காக தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 12 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள், டெஸ்ட், டி-20 ஆகிய அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஏற்கெனவே ரோகித் இரண்டாவது இடம் வகிக்கிறார். அதேபோல டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் 7-ஆவது இடத்தில் உள்ளார்.

இதற்கு முன்பு கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோர் மூன்று வகையான போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்திருந்தனர். மேலும் தற்போது வெளியாகியுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் விராட் கோலி (2ஆம் இடம்), புஜாரா(4ஆம் இடம்),ரஹானே(5ஆம் இடம்) மற்றும் ரோகித் சர்மா(10ஆவது இடம்) பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.