இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே கடந்த 10ஆம் தேதி கெளகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இதையடுத்து இந்திய அணி புள்ளிப் பட்டியலில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 2வது ஒருநாள் போட்டி, இன்று (ஜனவரி 12) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் நிசாங்கா மற்றும் மடுசனகா நீக்கப்பட்டு, நுவனிது பெர்னாண்டோ, லஹிரு குமாரா சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசூன் சனகா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கடந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று அதிக ரன்களைக் குவித்தது போன்று இந்தப் போட்டியிலும் அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் எனக் கணக்கு போட்டு இலங்கை அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஆனால், அவ்வணி எதிர்பார்த்தது நடக்கவில்லை. தொடக்க பேட்டர்கள் ஓரளவு நின்று ரன்களை எடுத்தபோதும், பின்வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தொடக்க பேட்டர்களான அவிஸ்கா பெர்னாண்டோ 20 ரன்களிலும் மற்றொரு வீரரான நுவனிது பெர்னாண்டோ 50 ரன்களிலும் வெளியேறினர்.
அவருக்குப் பிறகு களமிறங்கிய மெண்டிஸும் 34 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் பொறுப்புணர்ந்து ஆடிய கேப்டன் தசூன் சனகா, இன்றைய ஆட்டத்தில் 2 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் இலங்கை அணி, 39.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. கடந்த போட்டியில் 38 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்த இலங்கை, மேற்கொண்டு விக்கெட்டை இழக்காது அடுத்த 12 ஓவர்களில் 100 ரன்களைச் சேர்த்தனர். இந்த போட்டி ஜவ்வு மிட்டாய் போன்று இழுத்துக் கொண்டே சென்றதுடன் ரசிகர்களுக்கும் வெறுப்பைத் தந்தது. கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
அதே நிலைமை இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது. 152 ரன்களுக்கு 7 முன்னணி விக்கெட்களை இழந்து தத்தளித்த இலங்கை அணி, அடுத்த 3 விக்கெட்டில், அதுவும் பந்துவீச்சாளர்கள் மூலம் கூடுதலாக 67 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால்தான் இலங்கை அணி 200 ரன்களைத் தாண்டியது. 160 - 170 ரன்களுக்குள் முடிய வேண்டிய இன்றைய போட்டியும் ஜவ்வு மிட்டாய் போன்று இழுத்தது ரசிகர்களுக்கு வேதனையை தந்தது. இந்திய அணி தரப்பில், இன்று அணியில் சேர்க்கப்பட்ட குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும், முகம்மது சிராஜ் 3 விக்கெட்களையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
- ஜெ.பிரகாஷ்